இலங்கையில் சர்ச்சைக்குரிய அரசியல் வாதியாக கருதப்படுகின்ற முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா, ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் மீண்டும் இணைந்துள்ளார்.
சுதந்திரக்கட்சி தலைவரான மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து, கட்சி உறுப்புரிமையை அவர் பெற்றுள்ளார்.
மஹிந்த ராஜபக்சவின் ஆட்சி காலத்தில் பலம்மிக்க அமைச்சராக வலம் வந்த மேர்வின் சில்வா, தனக்கே உரிய பாணியில் அடாவடி அரசியலையும் முன்னெடுத்தார். களனி தேர்தல் தொகுதியை தனது அரசியல் கோட்டையாக மாற்றியமைத்துக்கொண்டார். அங்கு கட்டபஞ்சாயத்து அரசியலும் இடம்பெற்றது.
ஐ.நா. மனித உரிமை ஆணையாளராக இருந்த நவநீதம் பிள்ளை அம்மையார் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்தபோது, அவருக்கு திருமண அழைப்பை விடுத்து, நாட்டுக்கு இராஜதந்திர மட்டத்தில் பெரும் களங்கத்தை ஏற்படுத்தியவர் மேர்வின் சில்வா.
கிராம சேவகர் ஒருவரை மரத்தில் கட்டிவைத்து, அரச நிர்வாக சேவையில் கடும் எதிர்ப்பை தேடி கொண்டவர். ஊடக நிறுவனம்மீது தாக்குதல் நடத்தி ஜனநாயகத்துக்கும் அச்சுறுத்தல் விடுத்தவர்.
2015 பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்கு அவருக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி வேட்புமனு வழங்கவில்லை.
ராஜபக்சக்களுக்கு விசுவாசமாக இருந்த அவர், அதன் பின்னர் ராஜபக்சக்களை கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்தார்.
‘மக்கள் சேவை’ எனும் கட்சியையும் உருவாக்கினார். அதன் தலைவராக மேர்வினும், செயலாளராக அவரின் மகன் மாலக சில்வாவும் பதவி வகித்தனர்.
கடந்த பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி ஊடாக அநுராதபுரம் மாவட்டத்தில் போட்டியிட்டு மேர்வின் தோல்வி அடைந்தார். தற்போது சுதந்திரக்கட்சியில் இணைந்துள்ளார். மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக இருந்த காலத்தில் அவரையும் மேர்வின் சில்வா, கடுமையாக விமர்சித்துள்ளார்.
Discussion about this post