மத்திய ஆபிரிக்க நாடான கொங்கோவில் உள்ள பல்வேறு மாகாணங்களில் கடந்த சில நாட்களாக கடும் மழை பெய்து வருவதுடன், பல்வேறு பகுதிகளில் மண்சரிவும் ஏற்பட்டுள்ளது. கடும் மழை மற்றும் மண்சரிவில் சிக்கி 203 பேர் உயிரிழந்துள்ளதாக கொங்கோ அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், படுகாயமடைந்த 400 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், பலர் காணாமல்போனதாகவும் கூறப்பட்டுள்ளது. அதேநேரம், வெள்ளம், மண்சரிவில் சிக்கியவர்களை மீட்கத் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர், இராணுவத்தினர் களமிறக்கப்பட்டு மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வெள்ள நீர் தொடர்ந்து அதிகரித்து வருவதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பல வீடுகள் மக்கள் மீது இடிந்து விழுந்ததாகவும், மற்றும் மண்சரிவு ஏற்பட்டு அப்பகுதியில் உள்ள முக்கிய வீதிகள் மூடப்பட்டுள்ளது.
இதுகுறித்து அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘இதுவரை 203 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன, ஆனால் மற்றவர்களைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் தொடர்கின்றன’ எனத் தெரிவித்துள்ளார். இந்நிலையில், வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், ஒரு நாள் துக்க தினமாக அனுஷ்டிக்கப்படும் என்று அந்நாட்டு ஜனாதிபதி பெலிக்ஸ் தெரிவித்துள்ளார்.
Discussion about this post