முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி வளாகத்தில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த ஊடகவியலாளர்கள் இருவர் சிறிலங்கா காவல்துறையினரால் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
அதேநேரம் அவர்களின் கடமைக்கு காவல்துறையினர் இடையூறும் ஏற்படுத்தியுள்ளனர்.
கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி வாளகத்தில் மூன்றாவது நாள் அகழ்வாய்வு பணிகளை பார்வையிடுவதற்கு யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்கள் சென்றிருந்தனர்.
மனிதப்புதைகுழி அமைந்த பாதுகாப்புக்கூரை அமைக்கப்பட்ட உட்பகுதியிலிருந்து பார்வையிடுவதற்கு வருகைதந்த மருத்துவபீட மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
இதன்போது மனிதப் புதைகுழியின் பாதுகாப்புக் கூரையின் வெளியே இருந்து ஊடகவியலாளர்களான விஜயரத்தினம் சரவணன் மற்றும், பாலநாதன் சதீஸ் ஆகியோர் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்தபோது, ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிப்பில் ஈடுபட முடியாதெனக் கூறி காவல்துறையினர் ஊடகவியலாளர்களின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்தியதுடன், அவர்களை தள்ளி அச்சுறுத்தல் விடுத்திருந்தனர்.
அத்தோடு நீண்ட தூரத்திலிருந்து செய்தி சேகரிக்க வேண்டுமெனவும் ஊடகவியலாளர்களை காவல்துறையினர் கூறியுள்ளனர்.
இந்த மனிதப்புதைகுழி அகழ்வு தொடர்பில் ஏற்கனவே இடம்பெற்ற கலந்துரையாடல்களில் ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிப்பதற்கு அனுமதியளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில் காவல்துறையினரின் இத்தகைய அடக்குமுறைச் செயற்பாடு ஊடகவியலாளர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விடயம் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிக்க அனுமதி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post