இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கருக்கும், இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையிலான சந்திப்பு கொழும்பில் இன்று நடைபெறவுள்ளது.
இலங்கையில் நடைபெறவுள்ள ‘பிம்ஸ்டெக்’ மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய வெளிவிவகார அமைச்சர் இன்று காலை கொழும்பு வரவுள்ளார்.
இந்தப் பயணத்தின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் தமிழ் முற்போக்குக் கூட்டணி உள்ளிட்ட கட்சிகளுடன் அவர் பேச்சு நடத்துவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சருக்கும் இடையிலான சந்திப்பு இன்று மாலை 4.30 மணியளவில் கொழும்பிலுள்ள இந்தியன் இல்லத்தில் நடைபெறவுள்ளது.
இந்தச் சந்திப்பில் கூட்டமைப்பின் சார்பில் அதன் தலைவர் இரா.சம்பந்தன், பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான த.சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராசா இந்தச் சந்திப்பில் கலந்துகொள்ள மாட்டார் என்று அறியமுடிகின்றது. ஜனாதிபதியுடனான சந்திப்பு முடிவடைந்த பின்னர் நேற்றுமுன்தினம் அவர் யாழ்ப்பாணம் வந்துள்ளார்.
இந்த நிலையில் வெளிவிவகார அமைச்சருடனான சந்திப்புத் தொடர்பில் அவருக்கு நேற்று மதியமே தெரியப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அவர் இன்றைய சந்திப்பில் பங்கேற்கமாட்டார்.
Discussion about this post