தமிழ் மக்களின் விவசாயக் காணிகளை அபகரிக்கும் அரசு சிங்கள மக்களுக்கு மட்டுமே விவசாயம் செய்யும் உரிமையை வழங்க முயற்சிக்கின்றது.
இன அழிப்பின் சிந்தனையாகவே குருந்தூர் மலையில் புத்தபகவான் சிலையை நிறுவும் செயற்பாடு முன்னெடுக்கப்படுகின்றது என்று தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் குற்றஞ்சாட்டினார்.
நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற குற்றவியல் நடவடிக்கை கோவை திருத்த சட்டமூல விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
1932 ஆம் ஆண்டு குருந்தூர் மலை தொல்லியல் இடம் என்று மட்டுமே குறிப்பிடப்பட்டது. ஆனால் 2020 ஆம் ஆண்டு குருந்தூர் மலை தேவவிகாரை எனக் கூறிப் புத்தர் சிலை வைக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
சிங்களவர்கள் இல்லாத, பௌத்தர்கள் இல்லாத இங்கு புத்தர் சிலை வைப்பதன் முக்கிய நோக்கம் சிங்கள குடியேற்றம் மட்டுமே. அதை தற்போதைய நெருக்கடியில் இலங்கைக்கு உதவும் நாடுகள் புரிந்து கொள்ள வேண்டும்.
தண்ணி முறிப்பு மக்கள் 78 ஆண்டுகளாக விவசாயம் செய்து வரும் விவசாயக் காணிகளை ஆக்கிரமிக்கவும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
1956-57 ஆண்டு காலப்பகுதியில் அவ்வப்பிரதேச செயலகங்கள் ஊடாகவே இந்த காணி உரிமைகள் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்டிருந்தன. அதையே தற்போது ஆக்கிரமிக்க முயற்சிக்கப்படுகின்றது.
தற்போதைய நெருக்கடியான கால கட்டத்தில்அனைத்து மக்களையும் விவசாயம் செய்ய வேண்டும் என்று கூறும் அரசு தமிழ் மக்களின் விவசாயக் காணிகளை மட்டும் அபகரிக்கப் பார்க்கின்றது. சிங்கள மக்கள் மட்டுமே விவசாயம் செய்ய வேண்டும் என்று நினைக்கின்றது.- என்றார்
Discussion about this post