கிளிநொச்சி கிருஸ்ணபுரத்தில் அமைந்துள்ள வடக்கு மாகாண தொற்று நோயியல்
வைத்தியசாலையில் நோயாளிகளுக்கு வழங்கப்படுகின்ற உணவின் தரம் குறித்து
வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளாருடன் பேசி மாகாணத்திலிருந்து
குழு ஒன்றை அனுப்பி ஆராயப்படும் என வடக்கு மாகாண பிரதி பிரதம செயலாளர்
(நிதி) எஸ். குகதாஸ் அவர்கள் தெரிவித்துள்ளார்.
“சாப்பிட முடியாதளவுக்கு மிக மோசமான உணவு வழங்கப்பட்டு வருவதாக” கொரோனா
சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் கடந்த வெள்ளிக்கிழமை (20) அன்று எழுத்து
மூல முறைப்பாடு ஒன்றினை அந்த வைத்தியசாலை நிர்வாகத்திடம்
கையளித்துள்ளனர். அத்தோடு உணவின் தரம் குறித்து வைத்தியசாலை
நிர்வாகத்தின் பார்வைக்கு கண்காணிப்பு ஒளிவாங்கி (CCTV) ஊடாக
நேரலையாகவும் கொண்டு சென்றுள்ளனர்.
இதன் போது நோயாளிகளுக்கு உள்ளக தொடர்பாடல் கருவிகள் ஊடாகப் பதிலளித்த
மாவட்ட சுகாதார நிர்வாகம்; தாங்கள் சமைத்து வழங்கிய போது தரமான உணவினையே
வழங்கியதாகவும், இருந்தபோதும் ஊடகங்களில் தரமற்ற உணவு வழங்கப்படுவதாக
குற்றச்சாட்டுக்கள் எழுப்பட்டதாகவும் இதனை அடுத்தே தாம் தற்போது சமைத்த
உணவு வழங்கும் நடவடிக்கையினை ஒப்பந்தகாரர் ஒருவருக்கு பெறுகை நடைமுறை
ஊடாக வழங்கியுள்ளதாகவும் ஆகவே தற்போது ஒப்பந்தகாரரால் வழங்கப்படும்
சமைத்த உணவின் தரம் தொடர்பாக தங்களால் எதுவும் செய்ய முடியாது என்றும்
தெரிவித்துள்ளனர்.
பெறுகை நடைமுறைகளின்படி ஒப்பந்தங்களை எடுப்பவர்கள் ஒப்பந்தத்தின்
பிரகாரம் கேட்கப்பட்ட தரம் மற்றும் அளவுகளில் பண்டங்கள் மற்றும் சேவைகளை
வழங்குகிறார்களா? என தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுவதும் அவ்வாறில்லாத
பட்டசத்தில் அவற்றினைத் திருத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதும்,
அந்த ஒப்பந்தங்களை வழங்கிய திணைக்களத் தலைவர்களுக்கே (Procurement
Entity- PE ) உரிய கடமையாகும்.
எனவே இது தொடர்பில் வடக்கு மாகாண பிரதி பிரதம செயலாளர் (நிதி) எஸ்.
குகதாஸ் அவர்களிடம் தொடர்பு கொண்டு வினவியபோது அவர் மேற்படி விடயத்தை
ஏற்றுக்கொண்டதுடன் வைத்தியசாலைக்கு ஒப்பந்தகாரர் விநியோகிக்கின்ற உணவின்
தரம் குறித்து மாவட்ட/ மாகாண சுகாதார அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும்
என்பதனையும் வலியுறுத்தினார்.
இது தொடர்பில் பிரதி மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர்
நந்தகுமரன் அவர்களை தொடர்பு கொண்டு வினவியபோது “இந்த விடயம் தொடர்பில்
மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரிடமே வினவ வேண்டும் அவர் தற்போது கொவிட்
19 தொற்றுக்குள்ளாகி தனிமைப்படுத்தலில் இருகின்றார் அவரின் கவனத்திற்கு
நான் இவ்விடயத்தினைக் கொண்டு செல்வேன்” என உறுதியளித்தார்.
நீரிழிவு நோயாளிகள், உயர் குருதி அழுத்த நோயாளிகள், கர்ப்பிணிகள்,
சிறுவர்கள், குழந்தைகள் என பலர் கிருஸ்ணபுரம் தொற்று நோயியல் வைத்தியசாலை
சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுக்கு ‘வழங்கப்படுகின்ற உணவின் தரம்
மிக மோசமாக காணப்படுகின்றது என்றும் ஒவ்வொரு நேர உணவும் அதிக தாமதமாகவே
வழங்கப்படுகின்றது’ என்றும் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள்
தொடர்ச்சியாக தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post