கிராம அலுவலர் உறுதிப்படுத்தலை போலியாகத் தயாரித்த குற்றச்சாட்டில் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த மாதம் நடைபெற்ற கச்சதீவு திருவிழாவில் நகைகளைத் திருடிய குற்றச்சாட்டில் தென்னிலங்கையைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
அவர் மீது ஊர்காவற்றுறை நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட சந்தேகநபரை பிணையில் செல்ல மன்று அனுமதித்தது. இந்த நிலையில் சந்தேகநபருக்கான பிணை ஆவணங்களுக்காக கிராம அலுவலர் உறுதிப்படுத்தல் கடிதம் போலியாகத் தயாரிக்கப்பட்டுள்ளது.
போலியான இரப்பர் முத்திரை தயாரிக்கப்பட்டு இந்த உறுதிப்படுத்தல் கடிதம் தயாரிக்கப்பட்டதுடன், சந்கேகநபர் தொடர்பான போலியான தகவல்களும் வழங்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில் விசேட குற்ற விசாரணைப் பிரிவுப் பொறுப்பதிகாரி குணநிரோஜன் தலைமையிலான காவல்துறை குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். போலியான ஆவணங்களைத் தயாரித்தவர் தலைமறைவாகியிருந்த நிலையில், நேற்று அவர் மானிப்பாயில் வைத்துப் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் யாழ்ப்பாணம், திருநகரைச் சேர்ந்த 43 வயதுடையவர் என்றும் அவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றும் விசேட குற்ற விசாரணைப் பிரிவுப் காவல்துறையினர் தெரிவித்தனர்.
Discussion about this post