அமெரிக்காவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பாரிய பண மோசடியில் ஈடுபட்ட பெண்ணொருவர் வவுனியா பிரதேசத்தில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வவுனியா போகஸ்வெவ பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவர் 10 இலட்சம் ரூபாவை பெற்றுக்கொண்டு தனது சகோதரியின் ஊடாக வேலை தருவதாக ஏமாற்றியுள்ளதாக கம்பகா பிரதேசவாசி ஒருவர் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவில் அண்மையில் முறைப்பாடு செய்திருந்தார்.
5 முறைப்பாடுகள்
சந்தேகநபர் மீது பணியகத்திற்கு 5 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதையடுத்து, செயற்பட்ட விசாரணை அதிகாரிகள் குறித்த பெண்ணின் வீட்டுக்குச் சென்று கைது செய்துள்ளனர்.
முறைப்பாடுகளின் பிரகாரம், பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள், கொழும்பு அளுத்கடை நீதிமன்றில் அறிக்கையிட்டு, குறித்த பெண்ணுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்
பிரபல காப்புறுதி நிறுவனத்தில் மேலாளர்
அவர்களது விசாரணையின் போது, அவர் ஒரு பிரபலமான காப்புறுதி நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருவதாக பணியக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இம்மாதம் 7ஆம் திகதி வவுனியா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், அவரை எதிர்வரும் ஜூலை மாதம் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
Discussion about this post