காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் 14 ஆயிரத்து 988 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அவை தொடர்பில் துரித விசாரணை செய்யும் நோக்கில் 25 விசாரணைக் குழுக்களை அமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இவ்வாறு அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திபபு நேற்று முற்பகல் அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. அதில் அமைச்சர் இந்த தகவலை வெளியிட்டார்.
2016 ஆம் ஆண்டு 14 ஆம் இலக்க சட்ட ஏற்பாடுகளின் பிரகாரம் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பற்றிய அலுவலகம் நிறுவப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தால் மாத்தறை, மன்னார், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மற்றும் கிளிநொச்சி போன்ற பிரதேசங்களில் பிராந்திய அலுவலகங்கள் நிறுவப்பட்டுள்ளன.
அந்தப் பிராந்திய அலுவலகங்களுக்கு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பாக 14 ஆயிரத்து 988 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய முறையான விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு அறிக்கைகளை வழங்கல் உள்ளிட்ட அதிக பணிகள் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான அலுவலகத்துக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த முறைப்பாடுகளை விசாரணை செய்து முடிவுறுத்துவதற்காக 25 விசாரணைக் குழுக்களை நியமித்து துரித வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக நீதி அமைச்சர் அமைச்சரவைப் பத்திரத்தை முன்வைத்துள்ளார்.-என்றார்.
Discussion about this post