ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஐ.நா. பொதுச் செயலாளரிடம் குறிப்பிட்ட
விடயங்களில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு என்ன நடந்தது என்பதற்கான உண்மையை
தேடல், அவர்களுக்கான நீதி மற்றும் தவறிழைத்தவர்களுக்கான பொறுப்பு கூறல்
உள்ளிட்டவை தொடர்பில் எதுவுமே குறிப்பிடப்படவில்லை.
அரசாங்கம் உண்மையை கண்டறிவதற்கோ அல்லது பொறுப்பானவர்களை பொறுப்பு கூறச்
செய்வதற்கோ எவ்விதமான நடவடிக்கைகளையும் செய்யப்போவதில்லை என்பது இதன்
மூலம் தெளிவாகிறது என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள்
ஆணையாளர் சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் தெரிவித்தார்.
நல்லிணக்கத்திற்காக இணைந்து செயற்படுமாறு அழைப்பு விடுத்துள்ள ஜனாதிபதி ,
அண்மையில் சுமார் 300 புலம்பெயர் தமிழர் அமைப்புக்களுக்கு தடையையும்
விதித்தார்.
இதன் மூலம் ஒரு புறம் தடையையும் விதித்து , மறுபுறம் புலம்பெயர்
தமிழர்களுக்கு அழைப்பு விடுக்கின்றமை உண்மைக்கு மாறானதல்லவா? இது எம்
அனைவரையும் கேலிக்குட்படுத்துவதைப் போன்றுள்ளது என்றும் அம்பிகா
சற்குணநாதன் சுட்டிக்காட்டினார்.
ஐ.நா. பொதுச் செயலாளருடனான சந்திப்பின் போது ஜனாதிபதியால்
தெரிவிக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் வினவிய போது கேசரிக்கு இதனைத்
தெரிவித்தார்.
Discussion about this post