கோட்டாகோகம மற்றும் மைனாகோகம போராட்டக்காரர்கள்மீது கடந்த 09 ஆம் திகதி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் இரு எம்.பிக்கள் உட்பட ஏழுபேர் இன்று வரை குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மொரட்டுவ மேயர் சமன் லால் பெர்னாண்டோ, சீதாவக்கை பிரதேச சபையின் தலைவர் ஜயந்த ரோஹன, களனி பிரதேச சபை உறுப்பினர் மஞ்சுள பிரசன்ன ஆகியோர் இன்று கைது செய்யப்பட்டனர்.
அத்துடன், ‘நவ சிங்ஹலே’ அமைப்பினுடைய தலைவர் டான் பிரியசாத்தும் சிஐடியினரால் இன்று கைது செய்யப்பட்டார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர், காலிமுகத்திடல் வன்முறை தொடர்பாக நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர்களான சனத் நிஷாந்த மற்றும் மிலன் ஜயதிலக ஆகியோரே குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச உட்பட அரசாங்கம் உடனடியாகப் பதவி விலக வேண்டும் எனக் கோரி காலிமுகத்திடலில் ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக ‘கோத்தா கோ கம’ மற்றும் அலரிமாளிகைக்கு முன்பாக ‘மைனா கோ கம’ என்னும் பெயர்களில் தன்னெழுச்சியாக அமைதியான முறையில் போராட்டங்களை மேற்கொண்டு வந்த மக்கள் மீது கடந்த 9ஆம் திகதி முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஆதரவாளர்கள் தாக்குதல்களை நடத்தி வன்முறையில் ஈடுபட்டனர்.
இந்த வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த, நாடாளுமன்ற உறுப்பினர்களான சஞ்சீவ எதிரிமான்ன, மிலான் ஜெயதிலக, மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் உள்ளிட்ட 22 பேரைக் கைதுசெய்து நீதிமன்றத்தில் முற்படுத்த வேண்டும் என்று பொலிஸ்மா அதிபர் மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஆகியோருக்குச் சட்டமா அதிபர் நேற்றுமுன்தினம் பரிந்துரைத்தார்.
இந்த 22 சந்தேகநபர்கள் தொடர்பில் நேரடி, சூழ்நிலை மற்றும் தொழில்நுட்ப சாட்சியங்கள் இருப்பின் அவர்களை உடனடியாகக் கைதுசெய்து, சந்தேகநபர்களுக்கு எதிராகக் குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் சட்டமா அதிபர் அறிவுறுத்தியிருந்தார்.
சந்தேகநபர்கள் அவர்களின் முகவரிகளில் இல்லாவிடின் சாட்சியங்களை முன்வைத்து அவர்களைக் கைதுசெய்வதற்கு நீதிவான் ஒருவரிடமிருந்து திறந்த பிடியாணையைப் பெறவேண்டும் என்றும், உரிய முகவரிகளில் இல்லாத சந்தேகநபர்களைக் கைதுசெய்வதற்குப் பொதுமக்களின் உதவியை நாடுமாறும் சட்டமா அதிபர் தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் இதுவரை இரு எம்.பிகள் உட்பட 7 பேர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Discussion about this post