1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இடம்பெற்ற தமிழர் விரோத வன்முறையில் உயிரிழந்தவர்களுக்கான நினைவேந்தல் கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், சிங்கள பேரினவாதிகள் நிகழ்வை குழப்ப முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருந்து.
இந்த நிகழ்வு வடக்கு-தெற்கு ஒத்துழைப்புக் குழுவால் பொரளை பொதுமயானத்திற்கு முன்பாக நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில் ஐக்கிய சோசலிச கட்சியின் தலைவர் சிறிதுங்க ஜயசூரிய, சந்தியா எக்னெலிகொட உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டனர்.
எவ்வாறாயினும், நிகழ்வு ஆரம்பிப்பதற்கு முன்னரே அந்த இடத்தில் பொலிஸார், கலகக் தடுப்பு பொலிஸார், இராணுவம், மற்றும் விஷேட அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.
இதன்போது நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்ட இடத்திற்கு வந்த பேரினவாத குழுவினர் இடையூறு விளைவித்த போதிலும், அவர்களைக் கட்டுப்படுத்த பாதுகாப்பு தரப்பினர் யாரும் தலையிடவில்லை.
இந்த நிகழ்வை ஒழுங்கு செய்தவர்கள் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் என்றும் புலம்பெயர் தமிழர்களின் நிதியுதவியின் கீழ் செயற்படுவதாகவும் அங்கு வந்திருந்த பேரினவாத குழு உறுப்பினர்கள் குற்றம் சுமத்தியிருந்தனர்.
அமைதியான முறையில் நிகழ்வை நடத்துவதற்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நபர்களை கைது செய்து ஒன்றுகூடுவதற்கான உரிமையை உறுதிப்படுத்துமாறு பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்தனர்.
எனினும், கறுப்பு ஜூலை நினைவு நாளை அனுஷ்டிக்க வந்த மக்களையே பாதுகாப்பு தரப்பினர் பலவந்தமாக அங்கிருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுத்திருந்தனர்.
சந்தியா எக்னெலிகொட உள்ளிட்ட பலர் கீழே தள்ளவிடப்பட்டதாகவும், பலருக்கு காயம் ஏற்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது பொலிஸாருக்கும், நிகழ்வு ஏற்பாட்டாளர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னர் ஜயரட்ன மலர்சாலைக்கு முன்பாக ஒன்றுகூடிய நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் ஜூலை கலவத்தின் போது கொல்லப்பட்டவர்களின் நினைவாக தீபம் ஏற்ற முற்பட்டனர். அங்கும் கடும்போக்கு வாதிகள் எதிர்ப்பு வெளியிட்டனர்.
இதன்போது சுட்டி விளக்குகள் தட்டிவிடப்பட்டதுடன், பாதுகாப்பு தரப்பினர் கால்களால் சுட்டிகளை மிதித்து உடைத்ததாக குற்றம் சாட்டியிருந்தனர்.
இதுபோன்ற சம்பவங்கள் கண் முன்னே நடக்கும்போது, பொலிஸார் உள்ளிட்ட பாதுகாப்புப் படையினர் மௌனம் காப்பது ஏன் என்று நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் கேள்வி எழுப்பினர்.
40 வருடங்களுக்கு முன்னர் சிங்கள இனவெறியர்கள் பொலிஸார் மற்றும் இராணுவத்தின் உதவியுடன் தமிழர்களைக் கொன்று குவித்தனர் என்று மற்றொருவர் கூறினார்
கலகத் தடுப்புப் பிரிவின் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தனது கையில் விளக்கை தட்டியதாகவும், அதில் இருந்த சூடான எண்ணெய் தனது தலையிலும் கண்களிலும் பட்டதாக சந்தியா எக்னெலிகொட தெரிவித்தார்.
இதேவேளை,’கறுப்பு ஜூலை’ 40 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு சோசலிச இளைஞர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போராட்டத்தை கலைப்பதற்கும் பொலிஸார் நடவடிககை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post