இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான ஒத்துழைப்புக்களைக் குழப்புவதை நிறுத்த வேண்டும். சீனக் கப்பலுக்கான எதிர்ப்பு அர்த்தமற்றது. பாதுகாப்புக் கரிசனைகளை முன்வைப்பது இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கும் அர்த்தமற்ற நடவடிக்கை. சீனாவின் விஞ்ஞான ஆய்வுகளை நியாயமான மற்றும் விவேகமான முறையில் பார்க்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கின்றேன்.
இவ்வாறு சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் வாங்வென்பின் தெரிவித்துள்ளார்.
சீன ஆய்வுக் கப்பலான யுவான் வோங் – 5 இலங்கையின் அம்பாந்தோட்டைத் துறைமுகத்துக்கு வரவுள்ள நிலையில், அந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது.
செய்மதிகள் மற்றும் கண்டங்களுக்கு இடையிலான ஏவுகணைகள் செலுத்தப்படுவதை கண்காணிக்கும் திறன் உள்ளிட்ட பல்வேறு நவீன வசதிகளைக் கொண்டுள்ள இந்தக் கப்பல் சீன இராணுவத்தின் மூலோபாய படையணியின் கண்காணிப்பு கப்பல் என்று கூறப்படுகின்றது .
இவ்வாறான நிலையில், சீனக் கப்பலின் வருகைக்கு இந்தியா கடும் அதிருப்தியை வெளியிட்டிருந்தது. அதையடுத்து இலங்கை அரசாங்கம் கப்பல் வருகையை ஒத்திவைக்க வேண்டும் என்று சீனாவுக்குக் கடிதம் மூலம் கோரியது.
இது சீனாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இலங்கை அதிகாரிகளை உடனடியாகச் சந்திக்க வேண்டும் என்று இலங்கையில் உள்ள சீனத் தூதரகம் வேண்டுகோள் விடுத்திருந்தது.
பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு அதிகளவு கடனுதவி வழங்கும் நாடுகளாக சீனாவும், இந்தியாவும் உள்ளன. இந்த நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள இராஜதந்திர ரீதியிலான முரண்பாடுகள் இலங்கைக்குப் பெரும் தலையிடியாக மாறியுள்ளது.
இத்தகைய பின்னணியில் , சீனாவின் ஆய்வுக் கப்பல் இலங்கைக்கு வருவதற்கு இந்தியா வெளியிட்டுள்ள எதிர்ப்புத் தொடர்பாக ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியபோதே வாங்வென்பின் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இரு விடயங்களை நான் வலியுறுத்த விரும்புகின்றேன். இலங்கை இந்து சமுத்திரத்தின் ஒரு போக்குவரத்துத் தளம். சீனாவின் விஞ்ஞான ஆராய்ச்சிக் கப்பல்கள் உட்படப் பல கப்பல்கள் விநியோகத்துக்காக இலங்கைத் துறைமுகங்களில் தரித்து நின்றுள்ளன.
சீனா எப்போதும் ஆழமான கடற்பகுதிகளில் கடல் பயணத்துக்கான சுதந்திரத்தைப் பயன்படுத்தியுள்ளது. கடலோர நாடுகளின் அதிகார வரம்புக்குள் விஞ்ஞான ஆராய்ச்சிகளில் ஈடுபடுவதற்கான எல்லையை முழுமையாக மதிக்கின்றது.
இலங்கை இறைமையுள்ள நாடு. தனது அபிவிருத்தி நலன்களை அடிப்படையாகக் கொண்டு அந்த நாடு ஏனைய உலக நாடுகளுடன் உறவுகளை ஏற்படுத்த முடியும். சீனா – இலங்கை ஒத்துழைப்பு என்பதை இரு நாடுகளும் சுதந்திரமாகத் தெரிவு செய்கின்றன. அவை மூன்றாம் நாட்டை இலக்கு வைப்பதில்லை.
பாதுகாப்புக் கரிசனைகளை முன்வைப்பது இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கும் அர்த்தமற்ற நடவடிக்கை. சீனாவில் விஞ்ஞான ஆய்வுகளை நியாயமான மற்றும் விவேகமான முறையில் பார்க்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கின்றேன்.
இலங்கைக்கும் – சீனாவுக்கும் இடையிலான இயல்பான பரிமாற்றங்கள் மற்றும் ஒத்துழைப்புக்களைக் குழப்புவதை நிறுத்த வேண்டும்= என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோது அவர் நேரடியாக ‘அந்தக் குழப்பும் சக்தி’ இந்தியா என்று குறிப்பிடாமலேயே பதிலளித்துள்ளார் என்பதும் கவனிக்கத்தக்கது.
Discussion about this post