முல்லைத்தீவில் அளம்பில் பகுதியில் வெளிநாட்டில் இருந்து வந்த தாத்தா முறையான ஒருவர் திருமணமான பெண்ணை காரில் கடத்த முற்பட்ட சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸாரால் மூவர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியொன்றை சேர்ந்த 23 வயதான இளம் பெண்ணொருவருக்கு சில மாதங்களின் முன்னர் திருமணம் நடந்தது. சிறிது காலத்தில் குடும்பத்திற்குள் தகராறு ஏற்பட்டது.
தனது 23 வயதான மனைவிக்கும், மனைவியின் நெருங்கிய உறவினரான 63 வயதான தாத்தா முறையான நபருக்குமிடையில் காதல் தொடர்பு உள்ளது என்று கணவன், பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார். சுமார் ஒரு மாதத்தின் முன்பாக அவர் முறைப்பாடு செய்திருந்தார்.
கனடாவில் வசித்த அந்த முதியவர் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவின் பிறிதொரு பகுதியில் வசிப்பவர். முறைப்பாட்டுக்கு அமைய பொலிஸார் அந்த இளம்பெண்ணை அழைத்து விசாரித்த போது, 63 வயதான காதலனுடனேயே வாழ விரும்புகின்றேன் என்று தெரிவித்தனர்.
அதிர்ச்சியடைந்த பொலிஸார் அந்தப் பெண்ணுக்கு அறிவுரை கூறிப் பெற்றோருடன் அனுப்பி வைத்துள்ளனர். அதன்பின்னர் கடந்த ஒரு மாதமாக வெளித்தொடர்புகள் இல்லாமல் அந்தப் பெண், வீட்டில் தங்க வைக்கப்பட்டிருந்தார் என்று கூறப்படுகிறது. இருந்தும் அந்தப்பெண்ணுக்கு தாத்தா நகைகள் பணம் என பல உதவிகளை செய்துள்ளார் என்று தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் கடந்த 5ஆம் திகதி இரவு அந்த பெண்ணை கடத்திச் செல்ல முயன்றனர் என்று தெரிவித்து, வாகனமொன்றை சேதமாக்கிய பெண்ணின் உறவினர்கள், வாகன சாரதியையும் நையப்புடைத்தனர்.
கனடா தாத்தாவின் ஏற்பாட்டில் பிறிதொருவர் வாகனத்தில் வந்து அந்த பெண்ணை ஏற்றிச் செல்ல முற்பட்டார் என்று பெண்ணின் உறவினர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது. தாக்குதலுக்கு இலக்கான நபர் வாடகைப் பெறப்பட்ட வாகனம் ஒன்றைச் செலுத்தி வந்தவர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
தாக்குதலுக்கு இலக்கான வாகன சாரதியும், தாக்குதல் நடத்திய பெண்ணின் சகோதரர்கள் இருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர். அவர்களை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டது.
Discussion about this post