கனடாவுக்குள் நுழைவதற்கு வசதியாக இலவச பேருந்து சீட்டுக்களை அமெரிக்க நகரம் ஒன்று கொடுத்துவருவது குறித்து வெளியான தகவல் , கனடா புலம்பெயர்தல் அதிகாரிகளை அதிர்ச்சியடையவைத்துள்ளது.
நியூயோர்க் நகரத்திலுள்ள புலம்பெயர்ந்தோர் கனடாவுக்கு புலம்பெயர வசதியாக, இலவச பேருந்து சீட்டுக்களை வழங்கிவருவதாக, The New York Post என்னும் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
நியூயோர்க் மாகாணத்திலுள்ள Plattsburgh, கனடா நாட்டின் எல்லையிலிருந்து சுமார் 20 மைல் தொலைவில் தெற்கு திசையில் அமைந்துள்ளது. நியூயோர்க்கிலிருக்கும் புலம்பெயர்ந்தோருக்கு Plattsburgh நகருக்குச் செல்வதற்கு இலவச பேருந்து சீட்டுகள் வழங்கப்படுவதாகவும் அங்கிருந்து அவர்கள் கார் மூலம் கனடா நாட்டிலுள்ள கியூபெக்குக்குள் நுழைவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதாவது, Roxham Road என்ற இடத்தின் வழியாக ஆயிரக்கணக்கானோர் அமெரிக்காவிலிருந்து கனடாவுக்குள் நுழையும் தகவல் கனேடிய புலம்பெயர்தல் அதிகாரிகளை வியப்பிலாழ்த்தியுள்ளது.
கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே 2002ஆம் ஆண்டு செய்யப்பட்ட ஒரு ஒப்பந்தம் உள்ளது. அந்த ஒப்பந்தத்தின்படி, அமெரிக்கா, அல்லது கனடா ஆகிய நாடுகளுள், எந்த நாட்டுக்குள் முதன்முதலாக புலம்பெயர்ந்தோர் நுழைகிறார்களோ, அந்த நாட்டில் அவர்கள் புகலிடம் கோரலாம், அதாவது, அதிகாரபூர்வ எல்லை கடக்கும் பகுதி வழியாக வருவோருக்குத்தான் இது பொருந்தும்.
ஆனால், Roxham Road அதிகாரபூர்வ எல்லை கடக்கும் பகுதி அல்ல. ஆகவே, அமெரிக்காவுக்குள் நுழைந்தவர்கள்கூட, Roxham Road வழியாக கனடாவுக்குள் நுழைந்து, தாங்கள் முதலில் கனடாவுக்குள்தான் வந்ததுபோல காட்டி, கனடாவில் புகலிடம் கோருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இப்படிப்பட்ட ஒரு சூழலில், நியூயோர்க் நகரமும் இந்த ஒப்பந்தத்திலுள்ள ஓட்டையைப் பயன்படுத்தி, நியூயோர்க்கிலிருந்து புலம்பெயர்ந்தோர் கனடாவுக்குள் நுழைவதற்கு வசதியாக இலவச பேருந்து சீட்டுகளை கொடுத்துவருவதால், கனேடிய புலம்பெயர்தல் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளார்கள்.
Discussion about this post