கனடாவில் கொலைக் குற்றச்சாட்டின் அடிப்படையில் தண்டிக்கப்பட்ட இரண்டு பேர் 40 ஆண்டுகளின் பின்னர் குற்றமற்றவர்கள் என விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
1983ம் ஆண்டு இடம்பெற்ற கொலைச் சம்பவம் ஒன்று தொடர்பில் 1984ம் ஆண்டில் இருவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
76 வயதான ரொபர்ட் மெயில்மேன் மற்றும் 81 வயதான வோல்டர் ஜிலெஸ்பி ஆகிய இருவருமே இவ்வாறு தண்டிக்கப்பட்டு 40 ஆண்டுகளின் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
செயின்ட் ஜோன் பகுதியைச் சேர்ந்த ஜோர்ஜ் கில்மேன் லீமேன் என்ற நபரை படுகொலை செய்ததாக குற்றம் சுமத்தி தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
தண்டனைக்கு எதிராக 1988ம் ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீடு நிராகரிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் இந்த வழக்கு மீளவும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது விசாரணைகளில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதன்படி குறித்த இருவரும் குற்றமற்றவர்கள் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஜிலெஸ்பி 21 வருடங்களும், மெயில்மென் 18 வருடங்களும் சிறைத்தண்டனை அனுபவித்ததன் பின்னர், பரோலில் விடுவிக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post