பொலநறுவை, வெலிகந்தை – கந்தகாடு மறுவாழ்வு நிலையத்தில் இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மறுவாழ்வு நிலையத்தில் இருந்த 500 பேர் தப்பியோடியுள்ள நிலையில், நேற்று மாலை வரையில் 232 பேர் பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கந்தகாடு மறுவாழ்வு நிலையத்தில் போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் தடுத்து வைக்கப்பட்டு, அவர்களுக்குச் சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது. அங்கு 998 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
நேற்றுமுன்தினம் இரவு அங்குள்ள இரு குழுக்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அதில் மோதரையைச் சேர்ந்த 36 வயதான கைதி ஒருவர் உயிரிழந்தார். அதையடுத்து அங்கு பதற்றம் அதிகரித்தது. பதற்ற நிலைமையைப் பயன்படுத்தி மறுவாழ்வு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 500 பேர் அங்கிருந்து தப்பியோடினர்.
தப்பியோடியோரைத் தேடும் நடவடிக்கையில் இராணுவத்தினரும், பொலிஸாரும் ஈடுபடுத்தப்பட்டிருந்த நிலையில் நேற்று மாலைவரையில் 232 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது.
அதேவேளை, மறுவாழ்வு நிலையத்தில் உள்ளவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்றும், பாதுகாப்புத் தரப்பினரை உள்ளே அனுமதிக்கவில்லை என்றும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Discussion about this post