நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சகல கட்சிகளினதும் பிரதிநிதிகளும் நாளைய தினம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
தேர்தல் சட்டத்திட்ட மறுசீரமைப்பு தொடர்பில் நாடாளுமன்ற விசேட தெரிவுக் குழுவினால் முன்வைக்கப்பட்டுள்ள தேர்தல் முறைமை திருத்தம் தொர்பில் கலந்துரையாடுவதற்காக இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ராஜகிரியவில் உள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் அலுவலகத்தில் நாளை முற்பகல் 10மணியளவில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
இந்த சந்திப்பின் போது நாடாளுமன்ற விசேட தெரிவு குழுவினால் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகளில் சகல தரப்பினரும் இணங்கியுள்ள முன்மொழிவுகள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளது.
அத்துடன் இணக்கப்பாடு வெளியிடப்படாத முன்மொழிவுகள் தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது.
இதற்கமைய எட்டப்படும் இறுதி இணக்கப்பாட்டை சட்டமாக்குவதற்கு அவசியமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
நாளை கலந்துரையாடலை தொடர்ந்து நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தாத கட்சிகளும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்படவுள்ளன.
Discussion about this post