அனைத்து மதத்தினரையும் சமமாக நடாத்துவதும், ஒவ்வொரு குடிமகனுக்கும் சம உரிமை வழங்குவதும் தற்போதைய அரசாங்கத்தின் கொள்கையாகும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல்-ஹமாஸ் மோதலில் பலஸ்தீன மக்களை பலிகடா ஆக்குவதை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை எனவும், அந்த பிரதேசங்களில் மோதல்களை தடுத்து அமைதியை நிலைநாட்ட ஐ.நா பொதுச்செயலாளரின் வேலைத்திட்டத்திற்கு முழு ஆதரவை வழங்குவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
மன்னார் – முசலி தேசிய பாடசாலை விளையாட்டரங்கில் நேற்று (22.10.2023) இடம்பெற்ற தேசிய மீலாதுன் நபி விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சமய கலாசார அலுவல்கள் அமைச்சும் முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களமும் இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தன.
தேசிய மீலாதுன் நபி கொண்டாட்டம் 2023க்கான நினைவு முத்திரை மற்றும் முதல் நாள் அட்டையும் வெளியிடப்பட்டதுடன், தபால் மா அதிபர் ருவன் சரத்குமாரவினால் முதல் முத்திரை மற்றும் முதல் நாள் அட்டையை ஜனாதிபதிக்கு வழங்கி வைக்கப்பட்டது.
தேசிய மீலா துன் நபி கொண்டாட்டத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட விசேட நினைவுச் சின்னம் மற்றும் “மன்னார் மாவட்ட வரலாறு” புத்தகமும் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.
Discussion about this post