இலங்கையில் ஐந்து நட்சத்திர விடுதிகளில் ஒன்றான ஹில்டன் ஹோட்டல், அதன் சொந்த நிறுவனமான ஹோட்டல் டெவலப்பர்ஸ் லங்கா லிமிட்டெட்டை (Hotel Developers Lanka Ltd) கொள்வனவு செய்ய தெரிவு செய்துள்ள நான்கு தரப்பினரில் மூன்று இந்திய நிறுவனங்கள் அடங்கியுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
மும்பையில் அண்மையில் நடைபெற்ற இலங்கை சுற்றுலா நிகழ்வில் உரையாற்றிய அவர், பெரும்பாலும் இது இந்திய நிறுவனத்தின் கைகளுக்கு செல்லும் என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் தற்போது அரச உடமையின் கீழ் உள்ள கிரான்ட் ஹையாட் (Grand Hyat) விற்பனைக்கான திட்டத்திலும் தெரிவு செய்யப்பட்ட போட்டியாளர்களில் இரண்டு இந்திய நிறுவனங்கள் இருப்பதாக சுட்டிக் காட்டியுள்ளார்.
சர்வதேச விருந்தகம்
இந்தியாவிற்கு வெளியே இந்திய விருந்தக முத்திரையின் முதல் முயற்சியைக் குறிக்கும் வகையில், இன்டர்கொண்டினென்டல் ஹோட்டலை (Intercontinental hotel) விரைவில் திறப்பதுடன், ஐரிசி (ITC) கொழும்பில் இந்த மாத இறுதிக்குள் அறிமுகம் செய்யப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும், கலதாரி ஹோட்டல் விரிவான புனரமைப்புக்கு உட்பட்டு வருவதாகவும், இலங்கையில் சர்வதேச விருந்தக வரிசைக்கு வலுச் சேர்க்கும் வகையில், றெடிசன் ப்ளூ (Radisson Blu) என மறுப்பெயரிடப்பட உள்ளதாகவும் கூறியுள்ளார்.
Discussion about this post