சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியில் சர்ச்சை நிலைமை உருவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அரசாங்கத்தின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீடுகள் கட்சியின் சில உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
கட்சியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தலா ஐம்பது மில்லியன் ரூபா நிதி வழங்கப்பட்டுள்ளது.
அனுமதி பெறவில்லை
எனினும், இந்த நிதி ஒதுக்கீட்டை பெற்றுக்கொள்வது குறித்து கட்சியின் அனுமதியை குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெற்றுக்கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த காலங்களில், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தங்களது தொகுதிகளில் பணியாற்றுவதற்காக அரசாங்கம் இவ்வாறு நிதி ஒதுக்கீட்டை வழங்கியுள்ளது.
எனினும் கடந்த ஐந்து ஆண்டுகளில் இவ்வாறு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை, மாறாக மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கள் ஊடாக இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறான பின்னணியில் அரசாங்கம் சில எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு நிதி ஒதுக்கீடுகளை வழங்கியுள்ளது.
கயந்த கருணாதிலக்க, கலாநிதி ஹர்ஷ டி சில்வா, அஜித் மான்னப்பெரும, காவிந்த ஜயவர்தன மற்றும் ஜே.சீ அலவத்துவல ஆகியோருக்கு இவ்வாறு நிதி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சஜித்தின் அனுமதி பெறவில்லை
எனினும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சித் தலைமையின் அனுமதியை பெற்றுக்கொள்ளவில்லை என கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார (Ranjith Madduma Bandara) தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இது ஓர் வழமையான நடைமுறை எனவும் கட்சியின் அனுமதி பெற்றுக்கொள்ளத் தேவையில்லை எனவும் நிதி ஒதுக்கீடு பெற்றுக்கொண்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
Discussion about this post