கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கங்களிலும் இதர சமூக வலைத்தளங்களிலும் ஏறாவூர் நகர சபைக்குரிய பொதுச் சந்தையை “சிங்களச் சந்தை” எனக் குறிப்பிட்டு வருவதாக ஏறாவூர் நகர சபை உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.
இன்றைய ஆளுநரின் அறிக்கையிலும் “ஏறாவூர் சிங்களச் சந்தை” என குறிப்பிடப்பட்டுள்ளமை அங்குள்ள தமிழ் பேசும் மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆளுநரின் செயற்பாட்டுக்கு உடனடி எதிர்வினை
இது குறித்து உடனடியாக எதிர் வினையாற்றிய ஏறாவூர் நகர சபை உறுப்பினர் ஏ.எஸ்.எம்.சறூஜ், ஆளுநர் குறிப்பிட்டது போன்று அல்ல எனவும் ஏறாவூர் நகர சபைக்குச் சொந்தமான அந்தச் சந்தை எப்போதும் “பொதுச் சந்தை” தான் எனவும் ஆளுநருக்கு வலியுறுத்தியுள்ளார்.
இதனையடுத்து ஆளுநரின் அறிக்கையில் “ஏறாவூர் பொதுச் சந்தை” என மாற்றப்பட்டுள்ளது.
இதற்கு முன்னரும் கடந்த வருடம் நவம்பர் 11 ஆம் திகதி ஏறாவூர் நகர சபைக்குரிய பொதுச் சந்தையை “சிங்களச் சந்தை” எனக் குறிப்பிட்டு கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் கடிதம் அனுப்பிய விவகாரம் விமர்சனங்களுக்கு உள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post