ஏப்ரல் 21 குண்டுத்தாக்குல் தொடர்பான விசாரணைகளில் சர்வதேச விசாரணை நிறுவனங்களின் முழுமையான ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள ஜனாதிபதி அவதானம் செலுத்தியுள்ளார். நீதிமன்ற நடவடிக்கையின் ஊடாகவே தண்டனை வழங்க முடியும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்தார்.
நாடாளுமன்றில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாக்களின்போது ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களான சமிந்த விஜேயசிறி மற்றும் காவிந்த ஜயவர்தன ஆகியோர் ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவத்தின் விசாரணையின் முன்னேற்றம் தொடர்பில் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது-
ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவத்தின் விசாரணை அறிக்கையை மறைப்பதற்கும், குற்றவாளிகளை பாதுகாப்பதற்கும் வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு கிடையாது. ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்கு 66 ஆயிரம் பக்கங்களை கொண்ட அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. தேசிய பாதுகாப்பு காரணிகளின் நிமித்தம் ஆணைக்குழுவின் ஒருசில விடயங்களை பகிரங்கப்படுத்த முடியாது.
ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையின் உள்ளடக்கத்தை செயற்படுத்துவதற்காக அமைச்சரவை உப குழு நியமிக்கப்பட்டது. உப குழுவின் பரிந்துரைக்கமைய அறிக்கையின் பல விடயங்கள் தற்போதும் நிறுவன மட்டத்தில் செயற்படுத்தப்பட்டுள்ளன.
ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதலுக்கு நேரடியாகவும்,மறைமுகமாகவும் தொடர்புடைய தரப்பினர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள். விசாரணைகள் தாமதப்படுத்தப்படவுமில்லை, மூடி மறைக்கப்படவுமில்லை.
மெல்கம் ரஞ்சித் கர்தினால் ஆண்டகையின் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்படும் தகவல் உத்தியோகப்பூர்வமற்றதாகும். இந்த விடயம் தொடர்பாக அவதானம் செலுத்தப்படும். கர்தினாலின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம்.- என்றார்.
Discussion about this post