மின் நிலையங்களுக்குத் தேவையான எரிபொருளை தடையின்றிப் பெறுவதற்கான நடவடிக்கைகளைத் துரிதமாக எடுக்க வேண்டும் என்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச மின்சாரத்துறை அமைச்சர் காமினி லொகுகேயிடம் அவசர பணிப்புரை விடுத்துள்ளார்.
மின் உற்பத்திக்குத் தேவையான எரிபொருளைத் தனியார் துறையினரிடம் இருந்தேனும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் ஜனாதிபதி பணித்துள்ளார்.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தலைமையில் நேற்றுமுன்தினம் இரவு நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் நாளாந்தம் நடைமுறைப்படுத்தப்படும் மின்வெட்டுத் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
மின் உற்பத்தி நிலையங்களுக்குது் தேவையான எரிபொருளைப் பெற்றுக்கொள்ள மின்சார அமைச்சு பொருத்தமான திட்டங்களைத் துரிதமாகச் செயற்படுத்த வேண்டும் என்று அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அல்லது தனியார் தரப்புகளிடம் இருந்து மின் நிலையங்களுக்குத் தேவையான எரிபொருளைப் பெற்றுக்கொள்ள ஜனாதிபதி மின்சார அமைச்சருக்குப் பணித்துள்ளார்.
எரிபொருள் கொள்வனவுக்குத் தேவையான டொலரை விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால், எதிர்வரும் 5ஆம் திகதிக்குப் பின்னர் மின்வெட்டை நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது என்று நிதியமைச்சர் பஸில் ராஜபக்ச அமைச்சரவைக் கூட்டத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த மாதத்தின் இறுதி வாரமளவில் போக்குவரத்துச் சேவையில் நிலவும் நெருக்கடி நிலைமைக்குத் தீர்வு பெற்றுக்கொள்ள முடியும் என்றும் நிதியமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
அதேவேளை, முன்னதாக நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எரிபொருள் கொண்டுவரும் கப்பல்களுக்குத் தேவையான டொலர் விடுவிக்கப்படும் என்று நிதி அமைச்சு உறுதியளித்திருந்தபோதும், இதுவரை அந்த நிதி விடுவிக்கப்படவில்லை என்று வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
Discussion about this post