இலங்கை எதிர்க்கட்சியின் பொறுப்பினை ஏற்றுக்கொள்வதற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தயார் என தகவல் வெளியாகியுள்ளது.
காலியில் (Galle) நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன (Wajira Abeywardana) இதனை தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஐக்கிய மக்கள் சக்தி (SJB) எதிர்க்கட்சியின் பணியை சரியாகச் செய்யத் தவறியுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
எதிர்க்கட்சியின் கடமை
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “சுதந்திரத்தின் பின்னர் எதிர்க்கட்சியின் கடமைகளை உரிய முறையில் செய்யத் தவறிய கட்சியாக சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி வரலாற்றில் இடம்பிடித்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்திறனற்ற நிலையினால் 3 வீத வாக்குகளை கொண்ட தேசிய மக்கள் சக்தியின் (NPP) ஜனாதிபதி வேட்பாளர் தேர்தலில் வெற்றியீட்டியுள்ளார்.
சவால்களை வெற்றிகொண்டு எதிர்க்கட்சியின் பணிகளை ரணில் விக்ரமசிங்க செய்வதுடன் பொதுத் தேர்தலில் விரிவான கூட்டணி அமைத்து போட்டியிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.“ என தெரிவித்துள்ளார்.
எனினும் இந்த விடயம் தொடர்பில் ரணில் விக்ரமசிங்க அதிகாரபூர்வ அறிவிப்பு எதனையும் இதுவரையில் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post