எதிரணி அரசியல் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க அரசு முயற்சித்து வருகின்றது. நாட்டையும் மக்களையும் ஏமாற்றும் அத்தியாயம் ஒன்று இன்று மீண்டும் ஆரம்பமாகியுள்ளது.
இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றஞ்சாட்டியுள்ளார்.
நாளுக்கு நாள் கூடி, விவாதங்களை நடத்தி, நாட்டை அலைக்கழித்து, கலைந்து செல்வதைத் தவிர நாட்டைக் கட்டியெழுப்பும் எந்தவொரு வேலைத்திட்டமும் அரசிடம் இல்லை என்றும் அவர் சாடியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, சர்வதேச நாணய நிதியத்துக்கு வழங்கப்பட்டுள்ள வாக்குறுதிகள் எவை என வெளியிட வேண்டும். நாடு வீழ்ந்துள்ள வங்குரோத்து நிலையிலிருந்து மீட்கும் எந்தவொரு திட்டமும் அரசிடம் இல்லை.
போசாக்கின்மையால், பட்டினியால் சிறுவர்கள் வாடி பாடசாலைகளில் மயங்கி விழுகின்றனர். அவற்றை அம்பலப்படுத்தும் அதிகாரிகளுக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது.
தற்போதைய ஜனாதிபதி நான்கு பில்லியன் அமெரிக்க டொலரை கைவசம் வைத்துக்கொண்டு ஜனாதிபதி பதவியைப் பெற்றுக்கொண்டேன் என்று கூறியிருந்தார். அந்தப் பணம் தற்போது எங்கே உள்ளது?
சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கைகள் கூட இன்று மாறினாலும் அரசின் கொள்கைகள் மாறாதுள்ளமை வருத்தத்தையும் துயரத்தையும் அளிக்கின்றது.
இத்தனைக்கும் மத்தியில் பல்வேறு எதிரணி அரசியல் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க அரசு முயற்சித்து வருகின்றது. இந்த முட்டாள்தனமான அரசில் இணைவதற்கு ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து எவரும் தயார் இல்லை.
அரசியல் பொறாமையும் கபடமும் நிறைந்த அரசால் இந்நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது. பொருளாதாரத்தைச் சுருக்கி நாட்டைக் கட்டியெழுப்புவோம் என்ற மாயையை முன்வைத்து அரசின் அமைச்சுப் பதவிகள் அதிகரிக்கப்படுகின்றன என்றார்.
Discussion about this post