ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தபோதும் கொழும்பிலும், ஏனைய இடங்களிலும் அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்கள் நேற்றுத் தீவிரம் பெற்றன. மக்களின் போராட்டங்களை அடக்க பொலிஸார் மேற்கொண்ட முயற்சிகள் பயனளிக்கவில்லை.
கொழும்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் பெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இருந்து ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்டம் சுதந்திர சதுக்கத்துக்குச் செல்ல முயன்றபோது, சுதந்திர மாவத்தையில் பொலிஸார் வீதியில் பெரும் இரும்புத் தடைகளை ஏற்படுத்தி ஆர்ப்பாட்டம் முன்னகர்வதைத் தடுத்து நிறுத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டதுடன், பொதுமக்களும் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கலைப்பதற்குப் பொலிஸாரும், இராணுவத்தினரும் மேற்கொண்ட முயற்சிகள் பயனளிக்கவில்லை.
அதேநேரம், போரதனைப் பல்கலைக் கழக மாணவர்களால் பெரும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. பொலிஸாரின் தடைகளை மீறி ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பல்கலைக் கழகத்தில் இருந்து கண்டி நகரை நோக்கி அவர்கள் பேரணியாகப் புறப்பட்டனர்.
கலஹா சந்திக்கு அருகில் வீதித் தடைகளை ஏற்படுத்திய பொலிஸார், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களைக் கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். ஆயினும் மாணவர்களின் போராட்டம் கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை. ஆர்ப்பாட்டம் நடத்திய போது பேராதனை போதனா வைத்தியசாலை மருத்துவர்களும், பணியாளர்களும் மருத்துவமனை வளாகத்தில் இருந்து கைகளைத் தட்டி மாணவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்ததைக் காண முடிந்தது. மாணவர்கள் வீதித் தடைகளை அகற்றி பேரணியைத் தொடர முயன்றபோது, பொலிஸார் நீர்த்தாரைப் பிரயோகம் மற்றும் கண்ணீர் புகைக் குண்டுத் தாக்குதல்களை மேற்கொண்டனர்.
அதன்போது மாணவர்களுக்கும் பாதுகாப்புத் தரப்பினருக்குடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கண்ணீர்ப் புகைக்குண்டுகளை எடுத்து பொலிஸார் மீதும் மாணவர்கள் எறிந்ததில் பொலிஸாரும் பாதிப்புக்களை எதிர் கொண்டனர். மாலை 3 மணிவரை கலஹா சந்தியில் மாணவர்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
ராஜபக்சவினரின் கோட்டை என்று கூறப்படும் பொலநறுவையில் ஆயிரக் கணக்கானவர்கள் நேற்று அரசாங்கத்துக்கு எதிரான பேரணியை முன்னெடுத்தனர். அநுராதபுரத்திலும் பெரும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அதில் சாலியபுரத்தைச் சேர்ந்தவர்களும் பங்கெடுத்தனர். கோத்தாபய ராஜபக்ச பதவியில் இருந்து விலக வேண்டும் என்று ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.
பிரதேச வாசிகள், பல்கலைக் கழக மாணவர்கள் இணைந்து ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக் கழகத்தில் இருந்து ஆர்ப்பாட்டம் மேற்கொண்டதுடன், பேரணியாக விஜயராம முச்சந்தியை அடைய முயன்றபோது, அந்தப் பகுதி பலப்படுத்தப்பட்டு முப்படையினரும் களமிறக்கப்பட்டிருந்தனர். அத்துடன் வீதித் தடைகள் போடப்பட்டிருந்தமையால் ஆர்ப்பாட்டக்காரர்கள் முன்னகர முடியாத நிலைமை காணப்பட்டது. அங்கு அரசாங்கத்துக்கு எதிராகக் கோசங்களை எழுப்பில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இவற்றைத் தவிர மாலபே, மகரகம, மீகொட – பாதுக்க பிரதான வீதி, அவிசாவளை, பிலியந்தலை, வீரகொட்டிய, ராகம – பேரளந்த சந்தி, அம்பாந்தோட்டை, சூரியவெவ குருநாகல், கொட்டியகாவத்தை, தலவத்தகொட, கொழும்பு டுப்பிளிகேசன் வீதி, பம்னுவ, தெஹிவளை, இரத்மலான, கண்டி, காலி மற்றும் களனி பல்கலைக்கழகத்துக்கு முன்பாகவும் மக்கள் போராட்டங்கள் நடைபெற்றன.
யாழ்ப்பாணம் பல்கலைக் கழக கிளிநொச்சி வளாக மாணவர்களும், ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களும் அரசாங்கத்துக்கு எதிராகப் போராட்டங்களை முன்னெடுத்தனர். மவுன்டன்லெனியாவில் உள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் மனைவிக்குச் சொந்தமான கால்டன் முன்பள்ளிக்கு முன்பாகவும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
நேற்று இரவு கொழும்பு,கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்துக்கு முன்பாகக் கூடிய நூற்றுக்கணக்கானோர் அரசாங்கத்துக்கும், ஜனாதிபதிக்கும் எதிராகக் கோஷங்களை எழுப்பினர். இரவிரவாக அவர்கள் அங்கு தங்கியிருந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தச் செய்தி அச்சுக்குப் போகும் வரையில் பல இடங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் இரவிரவாகப் போராட்டங்களில் ஈடுபட்டவண்ணம் இருந்தனர்.
Discussion about this post