போதியளவு பொருளாதாரக் கொள்கை கட்டமைப்பை நடைமுறைப்படுத்தும்வரை, இலங்கைக்கு புதிய நிதியுதவியை வழங்குவதற்கான எந்தத் திட்டமும் இல்லை என்று உலக வங்கி கைவிரிவித்துள்ளது.
இலங்கைக்கு புதிய கடன் வசதிகளை பெற்றுக்கொடுப்பதற்கு உலக வங்கி தயாராகின்றது என்று அண்மைக்காலமாக தகவல்கள் வெளியான நிலையில், உலக வங்கி அறிக்கை ஒன்றின் மூலம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது.
இலங்கை மக்கள் மீது அக்கறை கொண்டுள்ளோம் என்று தெரிவித்துள்ள உலக வங்கி, பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் பரந்தளவிலான வளர்ச்சியை மீட்டெடுப்பதற்குப் பொருத்தமான கொள்கைகள் தொடர்பாக ஆலோசனை வழங்குவதற்காக சர்வதேச நாணய நிதியம் மற்றும் பிற அபிவிருத்தி பங்காளிகளுடன் ஒருங்கிணைந்து செயற்படுவோம் என்று சுட்டிக்காட்டியுள்ளது.
ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட சில நிதித் திட்டங்கள் மதிப்பாய்வு செய்யப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ள உலக வங்கி, இலங்கைக்கு அத்தியாவசிய மருந்துகளை வழங்குவதற்கும், ஏழைகள், விவசாயிகள் மற்றும் சிறு வணிகர்களுக்கு நிவாரணம் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.
உறுதியான பொருளாதாரக் கொள்கை ஒன்றை நிறைவேற்றும்வரையில் இலங்கைக்குப் புதிய கடன்கள் எதுவும் வழங்கப்படாது என்று தெரிவித்துள்ள உலக வங்கி, ஏற்கனவே அனுமதியளிக்கப்பட்ட திட்டங்களே மீளத் தயார்ப்படுத்தப்படுகின்றன என்று தெரிவித்துள்ளது.
நாடு பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில், புதிய அரசாங்கம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் பதவியேற்றுள்ளது. அதன்பின்னர் வெளிநாடுகள் மற்றும் அமைப்புக்களின் நிதி உதவிகள் தொடர்பான பல்வேறு தகவல்கள் வெளியாகியவண்ணமுள்ளன.
எனினும் இதுவரை எந்தவிதமான நிதி உதவியும் இலங்கைக்குக் கிடைக்கவில்லை. தொடர்ந்தும் டொலர் மற்றும் ரூபா பற்றாக்குறையால் இலங்கை அரசாங்கம் திணறி வருகின்றது.
Discussion about this post