சப்ஜா விதைகள் என்று சொல்லப்படும் துளசி விதைகள் உடல் எடையை குறைப்பதற்கு பயன்படுவதாக சமீப காலமாக பெரிய அளவில் பிரபலமாகி வருகிறது.
உடல் எடையை குறைப்பதற்கு உதவுவது மட்டுமல்லாமல், சப்ஜா விதைகளில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளது.
மேலும் இது உடல் சூட்டை குறைப்பது, ரத்த சர்க்கரை அளவுகளை கட்டுப்படுத்துவது, மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் அளிப்பது, அசிடிட்டி பிரச்சனை மற்றும் நெஞ்செரிச்சல் போன்ற பலவற்றிற்கும் தீர்வாக அமைகிறது.
சப்ஜா விதைகள் பல்வேறு உணவுகளில் சீசனிங் செய்வதற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அதுமட்டுமல்லாமல் பாரம்பரிய ஆயுர்வேதம் மற்றும் சீன மருத்துவத்தில் சப்ஜா விதைகள் ஆற்றும் பண்புகளுக்காக பல ஆண்டுகளாக உபயோகிக்கப்பட்டு வருகிறது.
சப்ஜா விதைகளில் இருக்கக்கூடிய அதிக அளவு நார்ச்சத்து காரணமாக சமீப காலமாக பலர் இதனை உடல் எடையை குறைப்பதற்கு பயன்படுத்துகின்றனர்.
எனவே இந்த பதிவில் உடல் எடையை குறைப்பதற்கு சப்ஜா விதைகளை நமது உணவில் எப்படி சேர்த்துக் கொள்ளலாம் என்பது குறித்து சில விஷயங்களை பார்க்கலாம்.
சப்ஜா விதைகளை தயார் செய்தல்
முதலில் நீங்கள் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து அதில் தேவையான அளவு சப்ஜா விதைகளை சேர்த்து அதனை ஊற வைக்க வேண்டும்.
15 முதல் 20 நிமிடங்களுக்கு பிறகு விதைகள் ஜெல் போன்ற ஒரு அமைப்பை பெற்றிருக்கும்.
இந்த ஜெல்லை சாப்பிடுவது நமக்கு வயிறு நிரம்பிய உணர்வை தருவதால் அதிகப்படியான உணவு சாப்பிடுவது தவிர்க்கப்பட்டு, கலோரி உட்கொள்ளல் குறைக்கப்படுகிறது.
இதனால் உடல் எடை குறைகிறது. இப்பொழுது இந்த ஊற வைத்த சப்ஜா விதைகளை உணவுகளோடு சேர்த்து எப்படி சாப்பிடலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
எப்படி சாப்பிடலாம்
பானங்களில் சப்ஜா விதைகள் : ஊற வைத்த சப்ஜா விதைகளை தண்ணீரில் கலந்து, இனிப்பு சுவைக்காக சிறிதளவு தேன் அல்லது இயற்கை இனிப்பான் சேர்த்து, அரை மூடி எலுமிச்சை சாறு பிழிந்து பருகுவது பசியை கட்டுப்படுத்தக்கூடிய ஒரு பானமாக அமையும்.
ஸ்மூத்தி: ஊற வைத்த சப்ஜா விதைகளை ஏற்கனவே நீங்கள் தயார் செய்த ஸ்மூத்தி ரெசிபிகளோடு சேர்த்து சாப்பிடுவது அதன் ஊட்டச்சத்தை மென்மேலும் அதிகரிக்க உதவும். அதுமட்டுமல்லாமல் உங்களது ஸ்மூத்தியில் உள்ள சப்ஜா விதைகளை நீங்கள் மென்று சாப்பிடும் பொழுது அது உங்களுக்கு ஒரு தனித்துவமான உணர்வை தருகிறது.
தயிர் மற்றும் ஓட்ஸ் கஞ்சியோடு சப்ஜா விதைகள்: நீங்கள் தயிர் அல்லது ஓட்ஸ் கஞ்சி சாப்பிடும் பொழுது அதில் சிறிதளவு ஊற வைத்த சப்ஜா விதைகளை தூவி சாப்பிடுவது அந்த உணவின் அமைப்பை மாற்றி, உங்களுக்கு வயிறு நிரம்பிய உணர்வை தருகிறது.
தேநீருடன் சப்ஜா விதைகள்: நீங்கள் சாப்பிடக்கூடிய ஹெர்பல் டீ குறிப்பாக உடல் எடையை குறைப்பதற்கு நீங்கள் பருகக்கூடிய கிரீன் டீ அல்லது இஞ்சி டீ போன்றவற்றில் ஊற வைத்த சப்ஜா விதைகளை சேர்த்து சாப்பிடலாம்.
புட்டிங்: ஊற வைத்த சப்ஜா விதைகளோடு சேர்த்து பாதாம் பால் அல்லது தயிர் அல்லது ஏதேனும் ஒரு இனிப்பான் போன்றவற்றை சேர்த்து புட்டிங்காக தயாரித்து அதன் மீது பெர்ரி பழங்கள் அல்லது நட்ஸ் போன்றவற்றை டாப்பிங் செய்யலாம். இதனை நீங்கள் ஒரு சில மணி நேரங்கள் அல்லது ஒரு இரவு முழுவதும் ஃப்ரிட்ஜில் வைத்து புட்டிங்காக செட் ஆன பிறகு சாப்பிட வேண்டும்.
சாலட்: உங்களுக்கு பிடித்தமான சாலட் வகைகளில் ஊற வைத்த சப்ஜா விதைகளை தூவி சாப்பிடுவது அதன் ஊட்டச்சத்தை அதிகரிப்பதற்கு உதவுகிறது. இது மாதிரியான யுக்திகளை நீங்கள் உங்களது உணவில் புகுத்தும் பொழுது, உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை எந்த ஒரு பக்க விளைவும் இல்லாமல் குறைக்கலாம். மேலும் அது மட்டுமல்லாமல் ஒரு சமச்சீரான உணவு மற்றும் அன்றாட உடற்பயிற்சி போன்றவை உங்களது எடை இழப்பு பயணத்தை இன்னும் எளிமையாக்கும்.
Discussion about this post