ரஷ்யா – உக்ரைன் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், உக்ரைன் பலவித நவீன போர் ஆயுதங்களின் சோதனைக் களமாக மாறுகின்றது.
இஸ்லாமியத் தீவிரவாதத்துக்கு எதிரான போர்களில் மட்டுமே இதுவரை பயன்படுத்தப்பட்டு வந்த தற்கொலை ட்ரோன் ஊர்திகளை அமெரிக்கா உக்ரைனுக்கு வழங்கவிருக்கிறது.
உக்ரைன் அதிபர் ஷெலன்ஸ்கி அமெரிக்காவின் காங்கிரஸ் உறுப்பினர்களுக்குத் தொலைக்காட்சி வழியே உரையாற்றியபோது மேலும் ஆயுத உதவிகளைக் கோரியிருந்தார். அதனையடுத்து சுமார் 800 மில்லியன் டொலர் பெறுமதியான போர் ஆயுதங்களை அமெரிக்கா வழங்குகிறது
இரண்டரைக் கிலோ எடையுடைய அந்தச் சிறிய ட்ரோன்கள் முதலில் ஷெல் போன்ற ஏவுகணை ஒன்றைச் செலுத்தி இலக்கைத் தாக்கும். பின்னர் தானே ஒரு ஏவுகணையாக மாறி இன்னொரு இலக்கைத் தாக்கிவிட்டுத் தன்னையும் அழித்துக் கொள்ளும். ஆப்கானிஸ்தான் போரில் அவற்றை அமெரிக்கா ரகசியமாகப் பயன்படுத்தியது. இப்போது ரஷ்யப் படைகளுக்கு எதிராகப் பயன்படுத்தப்படவுள்ளது.
அதேவேளை அண்மையில் அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிய சமயத்தில் காபூலில் இந்த ட்ரோன் மூலம் நடத்தப்பட்ட ஒரு தாக்குதலில் ஏழு குழந்தைகள் உட்பட பத்து ஆப்கானியர்கள் உயிரிழந்தனர். அந்தத் தாக்குதல் தவறுதலாக நடத்தப்பட்டது என்பதைப் பென்ரகன் பின்னர் ஒப்புக்கொண்டது.
Discussion about this post