இலங்கையில் சமையல் எரிவாயு, எரிபொருள் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றுக்கான வரிசை நாளுக்கு நாள் நீளும் நிலையில், இன்றைய தினமும் மக்களும், வாகன சாரதிகளும் பல்வேறு இன்னல்களை சந்திக்க நேரிட்டது. ஒரு சில பகுதிகளில் மோதல் சம்பவங்களும் பதிவாகின.
கொழும்பு உட்பட இலங்கையில் பல பகுதிகளிலும் எரிவாயு, எரிபொருள் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றை பெற்றுக்கொள்வதற்கு மக்கள் இன்று (21.05.2022) காலை முதல் வரிசைகளில் காத்திருந்தனர். வாகனங்களும் அணிவகுத்து நின்றன.
சமையல் எரிவாயு விநியோக முகவர்களுக்கு குறிப்பிட்டளவு தொகையே வழங்கப்படுவதால், சமையல் எரிவாயுவை வாங்குவதற்காக வரிசையில் நின்ற அனைவருக்கும் அதனை பெற்றுக்கொள்ள முடியா நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் முகவர்களுடன் மக்கள் முரண்படும் சம்பவங்களும் பதிவாகின.
எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் இந்நிலைமையே காணப்பட்டது. கேள்விக்கேற்ப நிரம்பல் இல்லாததால் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டன. சில இடங்களில் குறிப்பிட்டளவு எரிபொருளே விநியோகிக்கப்பட்டது. மண்ணெண்ணெய் விநியோகத்திலும் கட்டுப்பாடு தொடர்கின்றது.
அதுமட்டுமல்ல புதிதாக பிரதமர் பதவியை ஏற்றுள்ள ரணில் விக்கிரமசிங்கவையும், மக்கள் சரமாரியாக விமர்சிக்க தொடங்கியுள்ளனர்.
அதேவேளை, வரிசையில் நிற்கும் மக்கள் போராட்டத்தில் குதித்தால், சம்பந்தப்பட்ட எரிபொருள் நிலையங்களுக்கு இனி எரிபொருள் விநியோகிக்கப்படமாட்டாது என கொள்கை ரீதியான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
Discussion about this post