இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைமைப்பதவியை கைப்பற்றுவதற்காக அக்கட்சியின் உப தலைவர் செந்தில் தொண்டமானுக்கும், நிதிச்செயலாளர் மருதபாண்டி ராமேஷ்வரனுக்கும் இடையில் கடும் போட்டி நிலவிவருகின்றது.
தலைமைப்பதவிக்கான இந்த இரு முனைப்போட்டியால் உள்ளக மோதல் உக்கிரமடைந்துள்ளது. எனவே, கட்சி பிளவுபடுவதை தடுப்பதற்கு சிரேஷ்ட உறுப்பினர்கள் கடும் பிரயத்தனத்தில் ஈடுபட்டுவருவதுடன், ‘தவிசாளர்’ என்ற புதிய பதவியை உருவாக்குமாறு யோசனையும் முன்வைத்துள்ளனர்.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தேசிய சபை மார்ச் 30 ஆம் திகதி கூடவுள்ளது. இக்கூட்டத்தில் கட்டாயம் பங்கேற்குமாறு தேசிய சபை உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது கட்சியின் தலைவர் பதவி உட்பட ஏனைய சில பதவிகளுக்கு உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படவுள்ளனர்.
தலைவர் பதவிக்கு தான் போட்டியிடவுள்ளார் என்பதை கட்சிக்கு செந்தில் தொண்டமான் தெரியப்படுத்தியுள்ளார். ஜீவன்மீது அதிருப்தியில் உள்ளவர்கள் செந்தில் பக்கம் நின்கின்றனர்.
அதேபோல மற்றைய தரப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஷ்வரன் தலைமைப்பதவிக்கு போட்டியிடவுள்ளார்.
இ.தொ.காவின் தேசிய சபையில் 120 பேர்வரை அங்கம் வகிக்கின்றனர். வாக்கெடுப்பில் பங்கேற்கும் உறுப்பினர்களில் பெரும்பாலானவர்களின் ஆதரவை பெற்றவர் தலைவராக நியமிக்கப்படுவார். தலைவர் பதவிக்கு பெரும்பாலும் இரகசிய வாக்கெடுப்பே நடத்தப்படலாம்.
தேசிய சபைக்குள் இவ்விருவருக்கும் சம ஆதரவு இருந்துவருவதால் உறுப்பினர்களை வளைத்துபோடுவதற்கான பேரம் பேசுதலும் இடம்பெற்றுவருகின்றது.
இத்தேர்தலில் செந்தில் தொண்டமானுக்கு பின்னடைவு ஏற்படுமானால் கட்சி பிளவுபடும் அபாயம் இருப்பதால், தவிசாளர் பதவியை உருவாக்குமாறு சிரேஷ்ட உறுப்பினர்களால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தலைவர் பதவிக்கு போட்டியிட்டு தோல்வி அடைபவருக்கு இப்பதவி வழங்கப்படலாம். கட்சி பிளவுபடுவதை தடுப்பதற்கான ஓர் நகர்வாகவே இப்பதவி நியமனம் பார்க்கப்படுகின்றது.
இதொகாவின் பொதுச்செயலாளர் பதவியை ஜீவன் தொண்டமான் வகித்துவருவதால், தலைமைப்பதவியை அவரின் குடும்ப உறுப்பினர் ஒருவர் வகிப்பதற்கு காங்கிரசுக்குள் எதிர்ப்பும் வலுத்துள்ளது. எனவே, ரமேசுக்கான வாய்ப்பு அதிகம் என பெயர் குறிப்பிட விரும்பாத உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
Discussion about this post