ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பாகக் கொண்டுவரப்படவுள்ள தீர்மானத்தில் பொறுப்புக்கூறலுக்கான விடயங்கள் மறைக்கப்படாமலும், மறக்கப்படாமலும் இருப்பதற்கான உள்ளடக்கங்கள் இடம்பெற வேண்டும்.
இவ்வாறு சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பாக இறுதியாக கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்ட 46.1 தீர்மானத்தின் காலம் நிறைவடையவுள்ளது. தற்போது புதிய பிரேரணையொன்று பிரித்தானியா தலைமையிலான இணை அனுசரணை நாடுகளால் கொண்டுவரப்படவுள்ளது.
இந்தப் பிரேரணையில், இலங்கையின் பொறுப்புக்கூறல் தொடர்பில் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையால் குறிப்பிடப்பட்ட விடயங்கள் நீடிக்கப்பட வேண்டும். பொறுப்புக்கூறல் செயற்பாடுகள் மறைக்கப்படாலும் மறக்கப்படாலும் இருப்பதற்காக முக்கிய விடயங்களை உள்ளீர்க்க வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கின்றோம்.
சாட்சியங்களை திரட்டுவதற்கான பொறிமுறை உருவாக்கப்பட்டுள்ள நிலையில் அந்தப் பொறிமுறை அடுத்த பிரேரணையிலும் உள்ளடக்கப்படுவதோடு, அதற்கான அங்கத்தவர்கள் முழுமைப்படுத்தப்பட்டு செயற்பாட்டுக்கான நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அத்துடன், இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பான நிலவரங்கள் தொடர்பான கண்காணிப்பு தொடரப்பட்டு பேரவைக்கு அறிக்கையிடப்பட வேண்டும்.
இலங்கையின் மனித உரிமை நிலவரங்கள் தொடர்பாகக் காண்காணிப்பதற்காக விசேட அறிக்கையிடலாளர் ஒருவரையும் நியமிக்க முடியும். மியான்மாரில் இடம்பெற்ற விடயங்கள் சம்பந்தமாக விசாரணை செய்வதற்கு அமைக்கப்பட்ட விசேட நிபுணர்கள் அடங்கிய விசேட விசாரணைப் பொறிமுறையொன்றையும் உருவாக்க முடியும் என்று அவர் தெரிவித்தார்.
Discussion about this post