வலி. வடக்கில் பாதுகாப்புத் தரப்பினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகள் தொடர்பில் அமெரிக்க செனட் பிரதிநிதிகள் குழு நேற்று ஆராய்ந்துள்ளது.
யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ள செனட் குழுவினர், வலி. வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் சோ.சுகிர்தனை பிரதேச சபை தலைமை அலுவலகத்தில் நேற்று மாலை சந்தித்தனர். இதன்போது காணி ஆக்கிரமிப்புத் தொடர்பான ஆவணங்களையும் தவிசாளரிடமிருந்து பெற்றுக் கொண்டனர்.
வடக்கில் பாதுகாப்புத் தரப்பினர் வசமுள்ள காணிகள் தொடர்பில் கேட்டறிந்தனர் என்று தெரிவித்த வலி. வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் சோ.சுகிர்த, முக்கியமாக வலி. வடக்கு நிலைமைகள் தொடர்பில் பல தகவல்களை சேகரித்துக்கொண்டனர் என்று குறிப்பிட்டார்.
மயிலிட்டியில் 150 ஏக்கர் காணியை இராணுவம் விடுவித்தாக அறிவித்தபோதும் மக்களிடம் கையளிக்கவில்லை என்பதையும் சுட்டிக்காட்டினேன் என்று கூறிய அவர், பாதுகாப்புத் தரப்பினர் வசமுள்ள பாடசாலைகள், ஆலயங்கள் தொடர்பான விவரங்களையும் பெற்றுக்கொண்டனர் என்றும் தெரிவித்தனர்.
பாதுகாப்புத் தரப்பினர் வசமுள்ள காணிகளில் பயிர்ச்செய்கையில் ஈடுபடுதல், சுற்றுலா மற்றும் வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ளல் தொடர்பிலும் சுட்டிக்காட்டியபோது, கடற்படையினருக்கு தரையில் இவ்வளவு காணிகள் எதற்கு என்று அமெரிக்க செனட் பிரதிநிதிகள் குழு கேள்வி எழுப்பியது என்று வலி.வடக்கு பிரதேச சபைத் தவிசாளர் தெரிவித்தார்.
Discussion about this post