இலங்கை அரசியல்வாதிகள் எவரும் சர்வதேச சமூகத்திடம் தொடர்பை ஏற்படுத்துவதையும், அவர்களுக்கு அடைக்கலம் கொடுப்பதையும் நிராகரிக்க வேண்டும் என்று சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் வலியுறுத்தியுள்ளது.
சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் தலைவர் ஜஸ்மின் சூக்கா வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் உள்ளதாவது, சர்வதேச சட்ட அதிகாரத்துக்கு உட்பட்ட வழக்குகளை ஆரம்பிப்பதையும் தடைகள் கொண்டு வரப்படுவதையும் ஏதுவாக்கத்தக்க வகையில் பெரும் வன்கொடுமைக் குற்றங்கள் பொருளாதாரக் குற்றங்கள் மற்றும் ஊழல்கள் ஆகியவற்றின்மீது குற்றவியல் விசாரணைகளை ஆரம்பிப்பதற்கு குடிமக்களுக்கு சர்வதேச சமூகம் உதவ முன்வரவேண்டும்.
இலங்கையில் முழுமையான சீர்திருத்தங்கள் கொண்டுவரப்படவேண்டும் என முன்வைக்கப்படும் கோரிக்கைகள் வெறுமனே அதிகார வர்க்கத்தால் மேற்கொள்ளப்படும் ஊழலையும் ,பொருளாதாரக் குற்றங்களையும் மட்டுமே கையாள்வதற்கானதாக அல்லாமல் பெரும் வன்கொடுமைக் குற்றங்களிலில் ஈடுபட்டு தண்டனை பெறாமல் தப்பியிருப்போர் தொடர்பிலும் தமிழர்களது நீதிக்கும் பொறுப்புக்கூறலுக்குமான நீண்ட போராட்டத்துக்கும் தீர்வு வழங்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும்.
பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்ட 2009 இறுதிப்போரின் இந்தச் சோகமான ஆண்டு தினத்தை நினைவுகூரும் தமிழ் மக்களுடன் நாமும் கைகோர்த்து நிற்கின்றோம்.
பல தசாப்தங்களாகத் தொடர்ந்து வந்த பாரதூரமான சர்வதேச குற்றச்செயல்களுக்கான தண்டனைகளிலிருந்து விலக்களிக்கும் நடைமுறையானது. ஊழல் மற்றும் பொருளாதாரக் குற்றங்களுக்கும் தண்டனையிலிருந்து விலக்களிக்கும் நடைமுறைக்கு இட்டுச் சென்று வரலாற்றின் மிக இக்கட்டான நிலைக்கு இலங்கையை இன்று கொண்டுசென்றுள்ளது.
இன்று இலங்கையில் நிலவும் இந்தப் பரிதாபகரமான நிலைமைக்கு இதுவே காரணமாகும். தற்போதுள்ள தேவை நீதியும் பொறுப்புக் கூறலுமேயாகும். ஆனால் இலங்கை தொடர்ச்சியாக அதைச் செய்வதற்கு விருப்பமற்று இருந்து வந்துள்ளது.
சர்வதேச சட்ட அதிகாரத்துக்குட்பட்ட வழக்குகளை ஆரம்பிப்பதையும் தடைகள் கொண்டு வருவதையும் ஏதுவாக்கத்தக்க வகையில் பெரும் வன்கொடுமைக் குற்றங்கள் பொருளாதாரக் குற்றங்கள் மற்றும் ஊழல்கள் ஆகியவற்றின்மீது குற்றவியல் விசாரணைகளை ஆரம்பிப்பதற்கு குடிமக்களுக்கு சர்வதேச சமூகம் உதவ முன்வரவேண்டும்-என்றுள்ளது.
Discussion about this post