ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட்டின் சிறிலங்கா தொடர்பான அறிக்கை நேற்று வெளியாகியிருக்கும் நிலையில், சிறிலங்காவின் செயற்பாடுகள் தொடர்பில் பலத்த அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். சிறிலங்கா அரசாங்கம் முன்னெடுக்க வேண்டியவை தொடர்பான பரிந்துரைகளையும் அவர் முன்வைத்துள்ளார்.
சிறிலங்காவில் கடந்த காலங்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மீண்டும் இடம்பெறாத வகையில், பொறுப்புக்கூறல் மற்றும் ஆழமான மறுசீரமைப்புகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அதிகளவில் காணப்படும் இராணுவப் பிரசன்னம் குறைக்கப்பட வேண்டும் என்றும், இராணுவம் கைப்பற்றியுள்ள தனியார் காணிகளை விரைவில் விடுவிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ள அவர், அங்கு நிலவும் காணிப் பிணக்குகளுக்கு தீர்வு வழங்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
மனித உரிமைகளை பாதுகாக்கவும் மறுசீரமைப்புகளை மேற்கொள்ளவும், புதிய அரசாங்கம் தேசிய கருத்தாடலுக்கு செல்ல வேண்டும் என ஐ.நாப் மனித உரிமைகள் ஆணையாளர் வலியுறுத்தியுள்ளார்.
அரசியல் ரீதியாக மிகவும் நெருக்கடியை இலங்கை சந்தித்துள்ள நிலையில், புதிய பிரவேசத்துக்கு அதைச் சந்தர்ப்பமாக பயன்படுத்த வேண்டும் என ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
நாட்டில் நிறுவனங்களையும் பாதுகாப்பு பிரிவையும் மறுசீரமைக்க வேண்டும் என்று கூறியுள்ள அவர், தராதரம் இன்றி நாட்டின் அனைவரையும் பொருளாதார நெருக்கடி பாதித்துள்ளது என்றும், அதிலிருந்து மீள்வதற்கு ஊழலை ஒழிப்பது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
கடுமையான பாதுகாப்பு சட்டங்களில் தங்கியுள்ளமை மற்றும் அறவழி போராட்டக்காரர்களை அடக்கும் செயற்பாடுகளை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தியுள்ள அவர், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் பல்கலைக்கழக மாணவர் செயற்பாட்டாளர்களை கைது செய்யவு, பொதுமக்களின் போராட்டங்களை அடக்கவும், அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளமையைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கி, பொறுப்புக்கூறலை நிறைவேற்றும் வகையில் சட்டங்களை வகுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ள மிச்செல் பச்லெட், சட்டங்களை வகுக்கும் செயற்பாடு உரிய காலவரையறைக்குள் நிறைவு செய்யப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
காணாமலாக்கப்பட்டோர் தொடர்பில் ஆராயும் அலுவலகம் பலப்படுத்தப்பட வேண்டும் என்றுமு், சுயாதீனமாகவும் செயற்றிறனாகவும் செயற்படச் சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ள அவர், 2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளை சர்வதேசத்தின் ஒத்துழைப்புடன், வெளிப்படைத்தன்மையுடன் மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
அதேவேளை, சிறிலங்காவின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21 ஆம் திகதி கொண்டுவரப்பட்ட 46/1 தீர்மானம், இந்த அமர்வுடன் நிறைவுக்கு வருகின்றது. பிரிட்டன் தலைமையிலான ஒருங்கிணைந்த நாடுகள் இந்தத் தீர்மானத்தை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவந்ததுடன் அந்த தீர்மானம் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டிருந்தது.
தற்போது ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் புதிய பிரேரணையொன்று கொண்டுவரப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 12 ஆம் திகதி ஆரம்பமாகி அடுத்த மாதம் 02 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
Discussion about this post