இலங்கையின் 8 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வேட்பு மனு தாக்கல் , வாக்கெடுப்பு என்பன நாளையும், நாளை மறுதினமும் நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ள நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் இன்று முதல் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நாடாளுமன்றம் செல்வதற்கான பிரதான நுழைவாயில்களில் வீதித்தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன், பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர். படையினரும் உஷார் நிலையில் உள்ளனர். புலனாய்வு பிரிவும் களமிறக்கப்பட்டுள்ளது.
அத்துடன், புதிய ஜனாதிபதி தெரிவு இடம்பெறவுள்ள சூழ்நிலையில், நாட்டில் இன்று(18) முதல் அமுலாகும் வகையில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு கடும் எதிர்ப்புகள் வலுத்துள்ளன. அவசரகால சட்டத்தை நீக்குமாறு சட்டத்தரணிகள் சங்கம்கூட வலியுறுத்தியுள்ளது.
கொழும்பில் பல சுற்று பேச்சுகள்
நாடாளுமன்றம் நாளை முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடுகின்றது. இதன்போது ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்யப்படவுள்ளது.
தேர்தலில் போட்டியிடவுள்ள நால்வரும் கொழும்பில் இன்று முக்கியத்துவமிக்க சந்திப்புகளை நடத்தியிருந்தனர். தமக்கான ஆதரவை திரட்டும் முயற்சியிலும் தொடர்ந்தும் ஈடுபட்டுவருகின்றனர்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான சந்திப்பு, நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று நடைபெற்றது. இதன்போது ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஆதரவு ரணிலுக்கென உறுதியளிக்கப்பட்டுள்ளது.
அதேபோல எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும், ஜனாதிபதி வேட்பாளர் டலஸ் அழகப்பெருமவுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்றும் இன்று இடம்பெற்றது.
‘டலஸ் ஜனாதிபதி, சஜித் பிரதமர்’ என்ற இலக்கை அடையும் நோக்கிலேயே பலரின் முயற்சியால் சந்திப்புக்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எனினும், இதன்போது இறுதி முடிவு எதுவும் எட்டப்படவில்ல. வேட்பு மனு தாக்கலுக்கு முன்னர் மற்றுமொரு கலந்துரையாடல் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதன்பின்னர் விமல், வாசு, கம்மன்பில உட்பட 10 கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான பேச்சு நடைபெற்றது. இறுதி இணக்கப்பாடு எதுவும் எட்டப்படவில்லை. எனினும், ‘டலஸ் ஜனாதிபதி, சஜித் பிரதமர்’ என்ற விடயத்துக்கு பச்சைக்கொடி காட்டப்பட்டுள்ளது. 10 கட்சிகளின் நிலைப்பாடும் இன்று அறிவிக்கப்படும்.
இதற்கிடையில் காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் இன்று பல கட்சிகளையும் சந்தித்து கலந்துரையாடினர். எதிர்க்கட்சித் தலைவரை சந்தித்தபோது, ரணில் விக்கிரமசிங்கவை தோற்கடிப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என குறிப்பிட்டுள்ளனர். நாடாளுமன்றத்துக்குள் அதற்கான நடவடிக்கையை எதிரணி முன்னெடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்கவும் இன்று முக்கிய சந்திப்புகளை நடத்தியிருந்தார்.
கட்சிகளின் இறுதி முடிவு நாளை
தமிழ் முற்போக்கு கூட்டணி, முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் மக்கள் காங்கிரஸ் என்பன சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டணி அமைத்திருந்தாலும், தமது கட்சிகளின் ஆதரவு யாருக்கு என்பதை அக்கட்சிகள் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் முடிவும் நாளைய தினமே அறிவிக்கப்படவுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழுவும் நாளைக் கூடவுள்ளது.
மைத்திரிபால சிறிசேன தலைமையிலான, ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய செயற்குழுவும் நாளை கூடவுள்ளது. புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பின்போது எவருக்கும் வாக்களிப்பதில்லை என்ற கட்சியின் முடிவுக்கு சில எம்.பிக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இந்நிலையிலேயே மத்திய குழு அவசரமாக கூட்டப்பட்டுள்ளது.
போராட்டக்காரர்கள் – தொழிற்சங்கங்களின் முடிவு
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சுயாதீனமாக வாக்களிக்க இடமளிக்கப்படும். எனினும், 20 ஆம் திகதி ரணில் ஜனாதிபதியானால் போராட்டம் வெடிக்கும் என போராட்டக்காரர்களும், தொழிற்சங்க பிரமுகர்களும் அறிவித்தனர்.
Discussion about this post