இலங்கையில் (Sri Lanka) 2023 ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களில் சுமார் 500 கொலைகள் பதிவாகியுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் (Auditor General’s Department) வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையின்படி, கடந்த ஆண்டு குறித்த காலப்பகுதியில் 488 கொலைகள் நடந்ததுடன், அவற்றில் 52 துப்பாக்கிச் சூடுகள் அடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தங்காலை, நுகேகொடை, கம்பஹா, இரத்தினபுரி மற்றும் எல்பிட்டிய ஆகிய ஐந்து காவல்துறை பிரிவுகளில் அதிகளவான கொலைகள் பதிவாகியுள்ளதாகவும், தங்காலை பிரதேசத்தில் 32 கொலைகள் பதிவாகியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொள்ளையடிக்கும் சம்பவங்கள்
நாடு முழுவதும் 2018 மற்றும் 2022 க்கு இடையில் பலத்த காயங்கள் மற்றும் மனித கொலை சம்பவங்கள் 7017 பதிவாகியுள்ளதுடன், அவற்றில் 2030 குற்றங்களும் அடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் இடம்பெறும் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருவதைத் தடுக்க போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று கணக்காய்வு அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் கடந்த 6 ஆண்டுகளை கணக்கில் எடுத்துக் கொண்டால், கடந்த ஆண்டு அதிகளவான வீடுகளை உடைத்து கொள்ளையடிக்கும் சம்பவங்கள் நடந்துள்ளன.
2018ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த வருடத்தில் அந்த குற்றங்களில் 50 சதவீதம் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.
பெண்களுக்கு எதிரான வன்முறை
இதேவேளை, 2022ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் பெண்களுக்கு எதிரான வன்முறைக் குற்றங்கள் 27 வீதத்தால் அதிகரித்துள்ளதாக குறிப்பிடும் குறித்த அறிக்கை, பெண்கள் மீதான தவறான நடத்தைகளின் எண்ணிக்கை 182இல் இருந்து 226 ஆக அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது
ஏனைய ஆண்டுகளை விட கடந்த ஆண்டில் பெண்களை காயங்களுக்கு உள்ளாக்கல் மற்றும் தகாத முறைக்கு உட்படுத்தல் அதிகரித்துள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், கடந்த வருடம் அந்த குற்றங்களை தீர்ப்பதில் 99 சதவீத முன்னேற்றம் காணப்பட்ட போதிலும், குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளதாக கணக்காய்வு அறிக்கை தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post