“இலங்கையில் உள்ள தபால்காரர், தபால் சேவையின் நவீனமயமாக்கலின் ஒரு பகுதியாக, எதிர்வரும் காலங்களில் பாரம்பரிய மிதிவண்டிகள் இல்லாமல், முச்சக்கர வண்டிகள் மூலம் கடிதங்களை வழங்குவார்.
தபால் சேவையின் நவீனமயமாக்கலின் போது, நீண்டகாலமாக களத்தில் பயன்படுத்தப்பட்டு வந்த பாரம்பரிய மிதிவண்டிகளுக்கு பதிலாக 1000 முச்சக்கர வண்டிகள் நாடு முழுவதும் பயன்படுத்தப்படும்.
நாங்கள் உத்தியோகபூர்வ சீருடையையும் வழங்குவோம் என்று நம்புகிறோம். இதன் மூலம் நாட்டில் வலுவான தபால் சேவையை உருவாக்குவதே எமது இறுதி இலக்காகும்” என வெகுஜன ஊடக இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்தார்.
தபால் திணைக்களத்தின் நவீனமயமாக்கல் செயற்பாடுகளை துரிதப்படுத்தும் வகையில் புதிய தபால் சட்டமொன்று இந்த வருடம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
10 பில்லியன் செலவில் பொது-தனியார் கூட்டுப் பங்காளியாக நவீனமயமாக்கல் செயல்முறை மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தபால் திணைக்களம் எவ்வகையிலும் தனியார் மயமாக்கப்பட மாட்டாது எனவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் (PMC)நடைபெற்ற ‘நிலையான நாட்டிற்கான கூட்டுப் பாதை’ எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தபால் திணைக்களத்திற்கு ஏற்பட்டுள்ள நட்டம் 2023 ஆம் ஆண்டு இறுதிக்குள் 4000 மில்லியன் ரூபாவால் குறைக்கப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
Discussion about this post