கொழும்பில் பெரும் மக்கள் கிளர்ச் சியை அடுத்து ஜனாதிபதியும் பிரதமரும் பதவிவிலகுவதாகக்கூறி ஒதுங்கியிருக்கின்றனர். இதனால் அங்கு நிலவும் அதிகார வெற்றிடம் குறித்து இந்தியா மிக உன்னிப்பாக அவதானித்து வருகிறது என்று தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பில் ஆர்ப்பாட்டக்காரர்களால் முற்றுகையிடப்பட்ட ஜனாதிபதி மாளிகைக்கு அண்மையில் அமைந்துள்ள இந்தியத் தூதரகம் நேற்றைய சம்பவங்கள் குறித்து எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை.
ஆனால் இந்திய ராஜதந்திரிகள் கொழும்பு அரசு அதிகாரிகளுடன் தொடர்புகளைப் பேணியவாறு நிலைமைகளைக் கூர்ந்து கவனித்து வருகின்றனர் என்று இந்தியச் செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
மறைவிடம் ஒன்றில் தங்கியிருப்பதாகச் சொல்லப்படுகின்றசிறிலங்கா ஜனாதிபதி எதிர்வரும் புதன்கிழமையே முறைப்படி பதவிவிலகி அதிகாரத்தைக் கையளிக்கப்போகிறார்.
பிரதமர் தானும் பதவி விலக விரும்புவதாகக் கூறி விட்டு அவரும் ஒதுங்கியுள்ளார். ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகையின் உள்ளே இன்னமும் தங்கியிருந்து ஆடிப்பாடிக் கொண்டாடி உண்டு களித்துப் படங்களை எடுத்து மகிழ்கிறார்கள்.
கோட்டாபய ராஜபக்சே புதன்கிழமை பதவியைக் கைவிடும் வரை அவர்கள் மாளிகையை விட்டு வெளியேற மாட்டார்கள் என்றே நம்பப்படுகிறது. வாழ்நாளில் ஒரு சந்தர்ப்பம் எனக் கருதிப் பலரும் மாளிகைக்குள் சென்று பார்வையிட முனைவதாகக் கூறப்படுகிறது.
இந்தக் கட்டத்தில் ஜனாதிபதி மாளிகையை மீட்பதற்குப் பாதுகாப்புப் படைகள் உடனடியாகக்களத்தில் இறங்குமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
இதேவேளை ஜனாதிபதி கோட்டாபய எங்கே தங்கியிருக்கிறார் என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் நாட்டின் அடுத்த கட்ட எரிவாயு விநியோகம் தொடர்பாகஅதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்து அவர் வெளியிட்டதாகக் கூறப்படும் ஓர் அறிக்கையை ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
சர்வகட்சி அரசாங்கம் அமைப்பதற்குஆலோசனைகள் நடைபெற்று வருகின்ற போதிலும் சிறிலங்காவின் அரசியல் தலைமை களில் வேறு எவருமே இந்தக் கட்டத்தில் – இது குறுகிய காலத்தில் தீர்க்க முடியாத ஒரு நெருக்கடி என்பது தெரிவதால் – நாட்டின் தலைமைப் பொறுப்பை தாங்களாகத் தனித்துப் பொறுப்பேற்பதற்குத் தயாராய் இல்லை.
அத்துடன் ராஜபக்ஷாக்களால் உருவாக்கப்பட்டநிதிக் குழப்பத்தைத் தங்கள் தலையில் எடுத்து அகற்றுவதற்குஎவருமே விரும்பவில்லை இவ்வாறான ஒரு நிலை அங்கு காணப்படுவதைப் புதுடில்லி கவனத்தில் கொண்டுள்ளது என்று இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள் ளது.
அதேசமயம் இயன்றளவு மிக விரைவாக நாட்டின் ஆட்சி ஒழுங்கைச் சீர்செய்யுமாறு அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் கேட்டிருக்கிறது.
ஐரோப்பிய ஒன்றியமும் இலங்கையின் முன்னேற்றங்களை தொடர்ந்து அவதானிப்பதாகத் தெரிவித்துள்ளது. ஜனநாயக ரீதியானதும் அமைதியானதுமானஆட்சி மாற்றத்துக்கு ஒத்துழைக்குமாறு சகல தரப்புகளையும் அது கேட்டிருக்கிறது.
நாட்டில் அடுத்த சில நாட்கள் நீடிக்க இருக்கும் அதிகார வெற்றிடநிலைமை குறித்து இந்தியாவும் மேற்கு நாடுகளும் தீவிர கவனம் செலுத்திவருவது தெரிகிறது.
Discussion about this post