இலங்கையில் இந்த வருடத்தின் கடந்த 8 மாத காலப்பகுதியில், சிறுவர் துன்புறுத்தல்கள் தொடர்பில் 7 ஆயிரத்து 568 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன என்று தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. அவற்றுள் அதிகமான முறைப்பாடுகள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளன.
சிறுவர்கள் மீதான தாக்குதல்கள், பாலியல் துன்புறுத்தல்கள், தொழிலாளியாகப் பயன்படுத்தல் மற்றும் யாசகத்தில் ஈடுபடுத்தல் என்பன தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என்று தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
கம்பஹா, குருநாகல், அநுராதபுரம், கண்டி, இரத்தினபுரி மற்றும் மாத்தறை முதலான மாவட்டங்களிலும், சிறுவர்கள் தொடர்பாகக் கிடைக்கும் முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன என்றும் அவர் கூறியுள்ளார்.
சிறுவர் துன்புறுத்தல்கள் தொடர்பாக, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின், 1929 என்ற இலக்கத்தை அழைத்து முறைப்பாடளிக்க முடியும். 2021ஆம் ஆண்டு 11 ஆயிரத்து 187 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
சிறுவர்கள் மீதான துன்புறுத்தல்கள் தொடர்பாக அதிகளவில், அவர்களின் பெற்றோர்கள், பாதுகாவலர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
அதேவேளை, அறிக்கையிடப்பட்டதை விடவும் பெருமளவான சம்பவங்கள் அறிக்கையிடப்படாதுள்ளன என்றும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் சுட்டிக்காட்டினார்.
Discussion about this post