காலி முகத்திடலில் சுதந்திர தின நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஸ் குணவர்தன ஆகியோரின் தலைமையில் இன்றைய நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
அதில் பங்கேற்பதற்காக வெளிநாட்டு ராஜதந்திரிகள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
அதேநேரம், இந்த முறை சுதந்திர தின நிகழ்வுகளில் மூவாயிரத்து 284 இராணுவத்தினர், 179 யுத்த வாகனங்கள், 867 கடற்படையினர் மற்றும் அவர்களது 52 வாகனங்களும் பயன்படுத்தப்படவுள்ளன.
வான் படையின் 695 உத்தியோகத்தர்களும், 336 காவல்துறையினர் சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்கின்றனர்.
அத்துடன் காவல்துறை விசேட அதிரடி படையை சேர்ந்த 220 பேரும் இன்றைய சுதந்திர நிகழ்வில் இணையவுள்ளனர்.
இதேவேளை, 75ஆம் சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறைக் கைதிகள் 588 பேரும் தடுத்து வைக்கப்பட்டிருந்த 31 பேருக்கும் ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் 75 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் இந்த தருணம் எமக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் சவாலானதாகவும் அமைந்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கடந்த 75 ஆண்டுகளில் இலங்கை அடைந்தவற்றை விட இழந்தவையே அதிகமாகும் என சுதந்திர தினத்தை முன்னிட்டு அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவ்வாறு இழந்தவற்றை மீளப்பெறுவதற்காக உலகப் பொருளாதாரத்தில் பாரிய பங்கை மீண்டும் பெறுவதற்கு தேவையான உத்திகளை வகுப்பதே இந்த ஆண்டு முதன்மையான நோக்கமாகும்.
அதற்கான புதிய பொருளாதார மற்றும் சமூக சீர்திருத்த திட்டத்தை நாட்டில் தற்போது முன்வைத்துள்ளோம்.
பெருமைமிகு தேசமாக இருந்த இலங்கையர்களின், கடந்த கால பலத்தை மீண்டும் மீட்டெடுத்து, நவீன தொழில்நுட்பத்துடன் ஒன்றிணைந்து, போட்டி நிறைந்த உலகப் பொருளாதாரத்தின் புதிய இலக்குகளை நோக்கி துரிதமாக நகர வேண்டும்.
அணிசேரா என்றபோதும் தீர்க்கமான பலமுள்ள, பின்வாங்காத, காலநிலை மாற்றத்திற்கு தீர்வு காண்பதுபோன்ற நிலையான இலட்சியங்களுடன் கூடிய புதிய வெளியுறவுக் கொள்கையை தற்போது செயல்படுத்தி வருகின்றோம்.
உலகின் அனைத்து நாடுகளுடனும் இணைந்து செயற்படக்கூடிய இலங்கையர் என்ற வகையில் புதிய சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
Discussion about this post