இலங்கையில் தற்போதுள்ள எரிபொருள் நெருக்கடி இன்னும் ஒரு வருடத்துக்குத் தொடரும் என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன வீரசேகர தெரிவித்தார்.
பெற்றோல், டீசல் மற்றும் மசகு எண்ணெய் கப்பல்கள் இலங்கை வரும் திகதிகளை வரையறுக்க முடியாதுள்ளதால் மக்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
இலங்கைக்கு எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு அண்மையில் கடன் கடிதம் வழங்கப்பட்டபோதும், ரஷ்ய கப்பல் காரணமாக அது நிராகரிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார்.
அதேநேரம், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் சேமிப்புக் கிடங்குகளில் எரிபொருள் இருப்புக்கள் மிகக் குறைவான மட்டத்தை அடைந்துள்ளன.
கூட்டுத்தாபனத்தின் களஞ்சியத்தில் ஆயிரம் மெற்றிக்தொன் பெற்றோல் மட்டுமே தற்போது கையிருப்பில் உள்ளது. இது அவசரகால நிலைமைக்கே பயன்படுத்தப்படும். எதிர்வரும் நாள்களில் பொதுமக்களுக்கான பெற்றோல், டீசல் விநியோகம் முற்றாக நிறுத்தப்படவுள்ளது.
எரிபொருள் நெருக்கடி நிலைமை இலங்கையில் தீவிரமடைந்துள்ள நிலையில் ரஷ்யாவிடம் இருந்து எரிபொருள் இறக்குமதி செய்வது தொடர்பாக அரசாங்கம் ஆலோசித்து வருகின்றது. நாளை இரு அமைச்சர்கள் இதற்காக ரஷ்யா பயணமாகவுள்ளனர்.
ஆனால் ரஷ்யாவிடம் எண்ணெய் இறக்குமதி செய்வது இலங்கைக்கான மேற்குலக உதவிகளில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கருதப்படுகின்றது.
Discussion about this post