மலேசியாவுக்கு கொள்கலன் ஒன்றில் மறைந்து தப்பிச் செல்ல முயன்ற போது சீனாவில் கைது செய்யப்பட்ட இரண்டு இலங்கையர்களும் ஒரு வருடத்தின் பின்னர் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
அவர்கள் நேற்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த 2 சந்தேகநபர்களும் கடந்த வருடம் ஜனவரி 30ஆம் திகதி, கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பலில் இருந்த கொள்கலனில் மறைந்து மலேசியாவிற்கு தப்பிச் செல்ல முயற்சித்துள்ளனர்.
ஆனால் குறித்த கப்பல் மலேசியாவிற்கு வந்தபோது, கொள்கலனில் மறைந்திருந்த இரண்டு சந்தேகநபர்களையும் மலேசியா ஏற்றுக்கொள்ள மறுத்ததால், அதிகாரிகள் சந்தேகநபர்களை ஏற்றிக்கொண்டு பல நாடுகளுக்குச் சென்று இறுதியாக சீனாவிற்கு சென்றுள்ளனர்.
இதனை அடுத்து சீன அதிகாரிகள் இருவரையும் கைது செய்தனர்.
இந்தநிலையில், சந்தேகநபர்கள் இருவரையும் நாட்டில் இருந்து நாடு கடத்த நடவடிக்கை எடுத்த பின்னர், நேற்று காலை 5 மணி அளவில், சீனாவின் ஷாங்காய் நகரிலிருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த பின்னர், கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வு திணைக்களம், வர்த்தகம் மற்றும் ஆட்கடத்தல் புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் குழு அவர்களை கைது செய்து கொழும்பு கிருலப்பனை பகுதியில் உள்ள பிரதான அலுவலகத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.
26 மற்றும் 39 வயதுடைய இரண்டு பேரே இவ்வாறு தப்பிச்செல்வதற்கு முயற்சித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post