சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான கடனுதவியின் இரண்டாம் கொடுப்பனவிற்கு அனுமதி கிடைக்கப் பெற்றதன் மூலம், வங்குரோத்து நிலையிலிருந்து நாடு மீண்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
வங்குரோத்து அடைந்துள்ள நாடுகளுடன் ஒப்பிடுகையில், இலங்கை குறுகிய காலப்பகுதியில் பாரிய முன்னேற்றத்தை அடைந்துள்ளதாக நேற்று நாடாளுமன்றில் விசேட உரையாற்றிய ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.
இலங்கைக்கான நீடிக்கப்பட்ட கடன் வசதியின் இரண்டாம் தவணை கொடுப்பனவிற்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபை அனுமதி வழங்கியுள்ளது.
இலங்கை தற்போது கடன் நிலைத்தன்மையை அடைந்துள்ளதாக இது தொடர்பில் நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
நிதியத்தின் உடன்படிக்கைகளை நாம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் நடைமுறைபடுத்தியிருந்தால் இன்று இலங்கை நெருக்கடியை எதிர்நோக்கியிருக்காது. இலங்கை வங்குரோத்து அடைந்த நாடு எனும் பெயரிலிருந்து வெளிவர நடவடிக்கைகள் எடுத்துள்ளதை தற்போது நிதியம் ஒப்பு கொண்டுள்ளது.
இந்த நாட்டை பொறுப்பேற்க வேறு எந்த தலைவரும் முன்வரவில்லை. இதன் போது, எனது கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு உறுப்பினரும் நாடாளுமன்றில் இருக்கவில்லை. எனினும், தற்போது நாடாளுமன்றில் உள்ளவர்களில் பெரும்பாலானோர் எனக்கு ஆதரவளித்தனர்.
இந்த நிலையில், தற்போது நாம் வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டுள்ளோம். சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவியை நாம் பெற்றுக் கொண்ட செயல்முறையில், எனக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் இந்த வெற்றியில் பங்குண்டு என்றும் கூறினார்.
Discussion about this post