வெளிநாட்டு கப்பல்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ள போதிலும், இலங்கை(sri lanka) இந்த ஆண்டு குறைந்தது 12 வெளிநாட்டு கப்பல்களை தனது துறைமுகங்களில் நிறுத்த பாதுகாப்பு அனுமதியை வழங்கியுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
ஜனவரி 1, 2024 முதல், இந்தியா(india) மற்றும் அமெரிக்காவின்(us) பாதுகாப்புக் கவலைகள் , குறிப்பாக சீனக்(china) கண்காணிப்புக் கப்பல்களின் அடிக்கடி வருகை காரணமாக வெளிநாட்டு ஆராய்ச்சிக் கப்பல்களுக்கு இலங்கை ஓராண்டு தடை விதித்தது.
இந்திய நீர்மூழ்கி கப்பலின் வருகை
இதுவரை, இலங்கை 12 வெளிநாட்டுக் கப்பல்களை துறைமுகத்தில் நிறுத்த அனுமதித்துள்ளது, அண்மையில் இந்திய கடற்படை நீர்மூழ்கிக் கப்பல் (INS) ஷல்கி, ஓகஸ்ட் 2 அன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
2023ஆம் ஆண்டு இரண்டு சீனக் கப்பல்கள் இலங்கைக்கு வந்ததைத் தொடர்ந்து, இந்த ஆண்டு எந்த சீனக் கப்பல்களும் இலங்கைக்கு வரவில்லை.
தடை விதிக்கப்படுவதற்கு முன்னர் கடந்த வருடம் 32 வெளிநாட்டு கப்பல்கள் இலங்கையில் நிறுத்த அனுமதி வழங்கப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இதில் இந்தியாவிலிருந்து ஒரு டசின் கப்பல்களும், அமெரிக்காவிலிருந்து ஐந்து கப்பல்களும், ஜப்பான் மற்றும் இந்தோனேசியாவிலிருந்து தலா மூன்று கப்பல்களும் அடங்கும். மேலும், பிரான்ஸ், சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து தலா இரண்டு கப்பல்களும், அல்ஜீரியா, இங்கிலாந்து மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த மூன்று கப்பல்களும் 2023 ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரை இலங்கை துறைமுகங்களுக்கு வந்துள்ளன.
அலி சப்ரியின் அறிவிப்பு
வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி,(ali sabry) அடுத்த ஆண்டு வெளிநாட்டு ஆராய்ச்சிக் கப்பல்களின் அனுமதிக்கான கோரிக்கைகளுக்கு இலங்கை மீண்டும் அனுமதி வழங்கும் என்று சமீபத்தில் அறிவித்தார்.
வெவ்வேறு நாடுகளுக்கு வெவ்வேறு விதிகளை இலங்கையால் விதிக்க முடியாது என்றும் சர்வதேச சர்ச்சைகளில் பக்கபலமாக இருக்கப் போவதில்லை என்றும் அவர் வலியுறுத்தினார். வெளிநாட்டு ஆராய்ச்சி கப்பல்கள் மீதான தற்போதைய தடை, ஜனவரி 2025 இல் முடிவடைகின்றமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post