பேச்சுக்கள் வெற்றியளித்து, கடன் மறுசீரமைப்பு மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் செய்துகொள்ளக்கூடிய 3 முதல் 4 மாத காலப்பகுதி சவால் மிக்கதாக அமையும். அதை எதிர்கொள்வதற்கு இயன்றளவு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
நீண்டகால பொருளாதார ஸ்திரத்தன்மையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் கொள்கை ரீதியான தீர்மானங்களுக்கு, கட்சி பேதங்களை மறந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கி, நிதி அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று அரசாங்க நிதி பற்றிய குழுவில் முன்னிலையாகியிருந்தனர். அதன்போதே மத்திய வங்கி ஆளுநர் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.
அங்கு அவர் தெரிவித்துள்ளதாவது, முன்னர் எரிபொருளுக்கு விலைச்சூத்திரம் அறிமுகப்படுத்தப்பட்டபோது, அதற்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டதால் அதைச் செயற்படுத்த முடியாமல் போனது. இப்போது அதை அறிமுகப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கின்றது.
உலக வங்கியின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்படும் கொள்கைத் திட்டத்துக்காக ஒதுக்கப்பட்டுள்ள 600 மில்லியன் அமெரிக்க டொலரை எதிர்காலத்தில் எரிபொருள், எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் மற்றும் சேவைகளைக் கொள்வனவு செய்வதற்குப் பயன்படுத்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
எங்கிருந்தேனும் டொலரைப் பெற்றுக் கொடுத்தாலும் மின்சாரசபை, கனியவளக் கூட்டுத்தாபனம், லிட்ரோ போன்ற நிறுவனங்கள் எதிர்கொண்டுள்ள அதிக நட்டம் காரணமாக டொலரைக் கொள்வனவு செய்வதற்குப் போதிய ரூபா இல்லாமை பெரும் பிரச்சினையாக இருக்கின்றது.
சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுக்கள் வெற்றியளித்து, கடன் மறுசீரமைப்பு மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் செய்துகொள்ளக்கூடிய 3 முதல் 4 மாத காலப்பகுதி சவால் மிக்கதாக அமையும். அதை எதிர்கொள்வதற்கு இயன்றளவு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
அண்மைக்காலத்தில் பாதீட்டுத் திட்டத்தைத் தயாரிக்கும்போது மதிப்பீடு செய்யப்படும் அரசாங்கத்தின் வருமானம் உண்மை நிலைமைக்கு அப்பால் நடைமுறை சாத்தியமற்ற வகையில் குறிப்பிடப்படுகின்றது. நாடாளுமன்றம் தவறாக வழிநடத்தப்படுகின்றது.
இவ்வாறு மதிப்பீடு செய்யப்படும் அரசாங்கத்தின் வருமானத்தை அடிப்படையாகக்கொண்டு அமைச்சுக்கள் உள்ளிட்ட செலவீனங்களுக்காக அதிக தொகை ஒதுக்குவதானது, இறுதியில் செலவீனத்தை ஈடுசெய்ய முடியாத அளவுக்கு பாதீட்டுத் திட்டத்தில் துண்டுவிழும் தொகை ஏற்படுவதற்கும், கடன் சுமைக்குள் சிக்குவதற்கும் காரணமாய் அமைகின்றது.- என்றார்.
அங்கு கருத்துத் தெரிவித்த அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் அநுர பிரியதர்ஷன யாப்பா பொருளாதார நெருக்கடியைத் தீர்த்து ஸ்திரமான பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு எடுக்கப்படும் கொள்கை ரீதியான தீர்மானங்கள் மற்றும் அதற்கான பயணத் திட்டம் தொடர்பில் முழுமையான அறிக்கையை குழுவிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று பரிந்துரைத்தார்.
அதைக்கொண்டு நாடாளுமன்றத்தின் ஒத்துழைப்பைப் பெற்றுத்தர எதிர்பார்க்கின்றேன் என்றும் அவர் கூறினார். அதேவேளை, உள்நாட்டு திறைசேரி உண்டியல் கட்டளைச் சட்டத்தின் கீழ் இதற்கு முன்னர் அனுமதிக்கப்பட்ட தொகையைவிட மேலதிகமாக ஒரு ட்ரில்லியன் ரூபா வரை கடனைப் பெறுவது தொடர்பான தீர்மானத்தைப் நாடாளுமன்றத்தில் முன்வைப்பதற்கும் அரசாங்க நிதி பற்றிய குழுவில் இணக்கம் தெரிவிக்கப்பட்டது.
Discussion about this post