ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மொட்டு சின்னத்தில் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளர் ஒருவரை நிறுத்த உள்ளதாக அறிவித்துள்ள நிலையில், அக் கட்சியின் நாடாளுமன்ற ஊறுப்பினர்கள் பலர் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு வழங்க உள்ளதாக தெரிவித்து வருகின்றனர்.அந்தவகையில், திலும் அமுனுகம, அனுப பஸ்குவல், கீதா குமாரசிங்க, அஜித் ராஜபக்ஷ, எஸ்.பி.திஸாநாயக்க, பிரேம்நாத் சி தொலவத்த, காஞ்சன விஜேசேகர உள்ளிட்ட எம்.பி.க்களும் ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளனர்.இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அனுராதபுரம் மாவட்டக் குழுக் கூட்டத்தில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்துள்ளார்
எதிராக எம்.பி.க்கள் வாக்கு
மொட்டு சின்னத்தில் வேட்பாளர் ஒருவர் களமிறக்கப்பட வேண்டும் என நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
எவ்வாறிருப்பினும் அந்த தீர்மானத்துக்கு எதிராக 11 எம்.பி.க்கள் தமது வாக்குகளை அளித்திருந்தனர்.
இந்நிலையில் நேற்று இரவு மேற்குறிப்பிட்ட எம்.பி.க்கள் கொழும்பில் கூடி தமது நிலைப்பாடு தொடர்பில் கலந்தாலோசித்துள்ளனர்.
அதற்கமைய பெரும்பான்மை உறுப்பினர்களின் நிலைப்பாடுகளை ஏற்காமல் பொதுஜன பெரமுன வேட்பாளரைக் களமிறக்குவதற்கு தீர்மானித்துள்ளதால், தாம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்கவுள்ளதாக இவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்க வேண்டும் என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்காவிடின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிப் பெறுவார் என எஸ்.பி.திசநாயக்க எடுத்துரைத்துள்ளார்.
இந்நிலையில், பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதாகவும் அதன் பின்னர் நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்கவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post