யாழ்ப்பாண மாவட்டத்தில் குடும்ப அட்டைக்கே எரிவாயுவை விநியோகிப்பதற்கு யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நேற்று மாலை பிரதேச செயலர்களுடன் இடம்பெற்ற கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதற்காக எரிவாயு தேவையான மக்களை தமது முகவர்களிடம் பதிவு செய்ய அறிவுறுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களாக யாழ். மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட எரிவாயு விநியோகத்தின்போது பல்வேறு குளறுபடிகள் இடம்பெற்றுள்ளன.
எரிவாயு மாபியாக்களால், மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறானதொரு நிலையில் பல்வேறு அழுத்தங்களை அடுத்து எரிவாயு விநியோகத்தைச் சீராக்குவதற்கு மாவட்டச் செயலகம் தலையீடு செய்துள்ளது.
யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள எரிவாயு முகவர்கள் ஒவ்வொருவருக்கும், அவர்களது பகுதிகளைச் சேர்ந்த கிராம அலுவலர் பிரிவுகள் ஒதுக்கப்படும்.
அந்த கிராம அலுவலர் பிரிவுகளில் எரிவாயு தேவையான மக்கள் தமக்கு ஒதுக்கப்பட்ட முகவரிடம் குடும்ப அட்டையுடன் சென்று பதிவுகளை மேற்கொள்ளவேண்டும்.
பதிவுகளின் அடிப்படையில் எரிவாயுத் தேவையை கிராம அலுவலர்கள், அபிவிருத்தி அலுவலர்கள் இணைந்து கண்காணிப்புச் செய்வார்கள். எரிவாயுத் தேவை உறுதிப்பட்டவர்களின் விவரங்கள் மாவட்டச் செயலகத்துக்கு அனுப்பப்படும்.
அதன் பின்னர் மாவட்டத்துக்கு கிடைக்கப்பெறும் எரிவாயு எண்ணிக்கைக்கு ஏற்ப, பிரதேச செயலர் பிரிவுகள் முன்னுரிமைப்படுத்தப்பட்டு அவற்றுக்கு எரிவாயு சிலிண்டர்கள் ஒதுக்கப்படும்.
பின்னர் பிரதேச செயலர்கள் தமது பிரிவுக்கு எத்தனை முகவர்களுக்கு எவ்வளவு சிலிண்டர்கள் ஒதுக்கவேண்டும் என்பதை மக்கள் முன்னுரிமையின் அடிப்படையில் தீர்மானிப்பார்கள். அதற்கு அமைவாக முகவர்கள் ஊடாக மக்களுக்கு விநியோகம் இடம்பெறும்.
இந்த விநியோக நடவடிக்கையில் குடும்ப அட்டையில் பதிவுகளை மேற்கொள்ளும் செயற்பாட்டில் அபிவிருத்தி அலுவலர்கள் நேரடியாக ஈடுபடுத்தப்படுவார்கள்.
எரிவாயு தேவையான சகலருக்கும் இந்தப் பொறிமுறை ஊடாக சிலிண்டர்களை வழங்க முடியும் என்று நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இந்தத் திட்டத்தை கணினி மயப்படுத்தவும் மாவட்டச் செயலகம் தீர்மானித்துள்ளது.
Discussion about this post