முப்பது வருட இனப்படுகொலைப் போரில் நாங்கள் இழந்தவை ஏராளம். பிரிந்து இருப்பதை விடுத்து ஒருவருக்கு ஒருவர் ஆறுதலாக இருப்போம் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க நேற்றுத் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளதுடன், போரில் கொல்லப்பட்டோரை நினைவேந்தும் வகையில் சுடரேற்றும் ஒளிப்படம் ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.
நேற்று தமிழ் மக்கள் இனவழிப்புப் போரில் உயிரிழந்தவர்களை முள்ளிவாய்க்காலிலும், தமிழர்கள் வாழுமிடங்களிலும் அஞ்சலித்திருந்தனர். கொழும்பு காலிமுகத் திடலிலும், நினைவேந்தல் நடத்தப்பட்டிருந்தது. அதேநேரம், தெற்கில் போர் வெற்றியைக் கொண்டாடும் நிகழ்வுகள் நடைபெறுவது வழமை.
இந்தநிலையில், முன்னாள் ஜனாதிபதி தனது பேஸ்புக் பக்கத்தில்,’முப்பது வருட இனப்படுகொலை போரால் நாம் இழந்தவை ஏராளம். வடக்கு மற்றும் தெற்கில் உள்ள தாய்மார்கள் குழந்தைகளை இழந்துள்ளனர். பிள்ளைகள் பெற்றோரை இழந்தனர்.
சிங்களவர், தமிழர், முஸ்லிம் என அனைவருக்கும் இழப்புக்களே. போரால் நானும் ஒரு கண்ணை இழந்தேன். இன்னும் பல இழப்புகளைச் சந்திக்க வேண்டியிருந்தது. நாங்கள் சிங்களவர் தமிழர் முஸ்லிம்கள் என்று பிரிந்து போயுள்ளோம்.
போரின் முடிவைக் கொண்டாடும் இந்தவேளையில் நாம் நாம், வெறுப்புக்குப் பதிலாக அன்பைக் காட்டுவோம். பழிவாங்குவதற்கு பதிலாக, மன்னிப்போம். பிரிந்து கிடப்பதை விடுத்து ஒருவருக்கொருவர் ஆறுதலாக இருப்போம்.
இன்றைய நாளை உறுதியும் அமைதியும் கொண்ட நாளாக ஆக்குவோம். தீசகோதரத்துவத்தில் எழுந்து நிற்போம். இருளாக இருந்த எங்கள் நாட்டை சகவாழ்வெனும் விளக்கினால் ஔியேற்றுவோம். ’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அத்தோடு மரணித்தோரை நினைவுகூரும் வகையில் தீபமேற்றும் புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.
Discussion about this post